Breaking
Sun. Dec 22nd, 2024

-ஊடகப்பிரிவு-

இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் மேயரும், மக்கள் காங்கிரஸின் பிரதி தேசியமைப்பாளரும், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவை நான் மதிக்கின்றேன். அதுபோல் எனது கட்சியும் மதிப்பளிக்கின்றது. இது எமது மக்களின் நியாயமான போராட்டம். அது வெற்றியடைய வேண்டும். ஏனெனில் நான் மிகவும் நேசிக்கின்ற மக்களுக்கான இந்த தனி உள்ளூராட்சி மன்றத் தேவையினை நானே முதலில் மும்மொழிந்தவன். அந்த அடிப்படையில், நான் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாகவே இந்த தேர்தல் களத்தில் அமைதியாக இருக்கின்றேன்.

இந்தப் பிரதேசத்தின் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. என்பதனை யாவரும் அறிவார்கள். சாய்ந்தமருது மண்ணில் பிறந்தவன் என்ற வகையிலும், எல்லா பிரதேச மக்களையும் நேசிப்பவன் என்ற வகையிலும் இம்மக்களின் போராட்டத்துக்கு எமது கட்சியோ நானோ குறுக்கே நிற்கப்போவதில்லை.

அதுபோல் மிக முக்கியமான ஒரு விடயத்தை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். கட்சிக்கு வெளியிலும் கட்சிக்குள்ளும் பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு என்னை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கும் அதுபோல், கட்சித் தலைமை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் எனக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். என்றாலும் நான் ஒருபோதும் கட்சியிலிருந்து வெளியேறப்போவதுமில்லை. கட்சி செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கி நிற்கப் போவதுமில்லை.

எமது கட்சி நாளுக்கு நாள் பல்வேறு விதத்திலும் பரிநாம வளர்ச்சி கண்டு வருகிறது. எமது கட்சியின் மீதுள்ள நம்பிக்கையிலும், தலைமை மீது கொண்ட நம்பிக்கையிலுமே மக்கள் இன்று செயற்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் எமக்கான ஆதரவு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் இம்முறை பரவலாக எமது கட்சிக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

நான் மாநகர சபை மேயராக இருந்த காலத்தில் செய்த அபிவிருத்தியை தொடர்ந்தும் செய்வதற்கு எமது கட்சியின் அதிகாரபீடம் ஏறுகின்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நான் கல்முனை மாநகரை எவ்வாறு ஒரு குட்டி சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று இரவு பகலாக சேவையாற்றினேனோ, அதைவிட மிகச்சிறப்பாக இம்முறை கல்முனை மாநகர சபை ஆட்சி கைப்பற்றப்பட்டதும் நாம் இணைந்து கல்முனையை கட்டியெழுப்புவோம். இதற்காக மக்களது முழு ஒத்துழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கை தேர்தல் நெருங்க நெருங்க எமக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, கல்முனை மக்கள் வீணாக சந்தேகப்பட தேவையில்லை. எனக்கு எவ்வாறான தடைகள் சவால்கள் ஏற்பட்டாலும் நான் அவைகளை தகர்த்தெறிந்து, இப்பிரதேச மக்களுக்காக எனது உயிர் மூச்சு இருக்கும்வரை சேவை செய்வேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Related Post