Breaking
Tue. Dec 24th, 2024
-எஸ்.அஷ்ரப்கான்-
மக்களால் தெரிவுசெய்யப்பட்டு கல்முனை முதல்வரான என்னிடமிருந்த பதவியை 2 வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸினர் பறித்தெடுத்தார்கள் என முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும்,  லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கவலை தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வட்டாரம் 17ல் போட்டியிடும் எம்.ஐ.எம்.அப்துல் மனாபினை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சிராஸ் மீராசாஹிப் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனதுரையில் குறிப்பிடுகையில்,
நான் பதவியை பெற்ற காலத்திலிருந்து இரவு பகல் பாராது சேவையாற்றியிருக்கின்றேன். எனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் மக்கள் தந்த அமானிதத்தை சிறப்பாக கருதி சேவையாற்றியிருக்கின்றேன் என்பதை, இந்த இடத்தில் மிக தைரியத்துடன் சொல்லிக் கொள்கின்றேன். என்னிடமிருந்து பதவி பறிக்கப்பட்ட பிறகு இன்று கல்முனை மாநகரத்தை பாருங்கள் எவ்வித அபிவிருத்தியும் இல்லாமல் இருளடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனை மாற்றியமைப்பதற்காக, இம்முறை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் படித்த, பண்புள்ள மக்களால் என்றும் மதிக்கப்படுகின்றவர்களிடம் அதிகாரத்தை கொடுத்து, இருள் சூழ்ந்துள்ள கல்முனை மாநகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுங்கள்.
நாங்கள் இம்மாநகரத்தை ஒரு வித்தியாசமான முறையில் கட்டியெழுப்புவோம். அதுபோன்று இம்மாநகர பிரதேச மக்களுக்கு இன, மத, பிரதேச வேறுபாடு பாராது கட்டியெழுப்புவோம். பிரதேசவாதம் பேசுகின்றவர்கள் எமக்கு வேண்டாம். தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரையும் அரவணைத்து ஆட்சி செய்கின்றவர்களான எங்களது கைகளை பலப்படுத்துங்கள். அப்போது நாம் 2 வருடகாலமாக எவ்வாறு அனைவராலும் விரும்பப்படுகின்ற ஆட்சியையும் செய்து மாநகரத்தை அபிவிருத்தி செய்தோமோ, அதனைப் போன்று நாம் ஆட்சியை தொடருவோம்.
கல்முனை மாநகரத்தின் இன்றைய நிலையை பார்த்தால் மிக வேதனையாக இருக்கின்றது. சிறியதொரு குப்பைகளை அகற்றுகின்ற விடயத்தில் கூட மிக பின்தங்கியிருக்கின்றது. இன்று முஸ்லிம் காங்கிரஸில் இருந்த ஆணிவேர்கள் அணைத்தும் வெளியேறி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற உண்மையான இயக்கத்தோடு கைகோர்த்திருக்கின்றார்கள்.
மு.கா விற்குள் இவ்வாறான நிலைமை இருக்கின்றபோது மீண்டும் நீங்கள் அந்தக் கட்சிக்கு அதிகாரத்தை வழங்குகின்றபோது என்ன நடக்கும் என்பதை சற்று சிந்தியுங்கள். கல்முனை மாநகரம் என்பது ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானதல்ல. எனவே முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களை அரவனைத்து செல்கின்ற மாநகர சபையாக இதனை மாற்றிக்காட்ட வேண்டும்.
மீண்டும் நீங்கள் வழங்குகின்ற அதிகாரத்தின் மூலம் மாநகர மக்களினுடைய பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். இந்த மாநகர மக்களுடைய அடிப்படைத் தேவைகளை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செய்து கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இன்று மக்கள் ஆணையை கேட்டு நிற்கின்றோம் என்றார்.

Related Post