பிறவ்ஸ் முஹம்மட்)
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரின் ஊடகப்பிரிவும் அதன் பழைய மாணவிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாத்திமா எப்.எம். கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை வெற்றிகரமாக ஒலிபரப்பானது. அடுப்படிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட பெண் சமுதாயம் இப்போது சகல துறைகளிலும் தங்களது இருப்பிடங்களை தக்கவைத்துள்ளனர் என்பதை இந்த வானொலி மூலமாக பாடசாலை மாணவிகள் நிரூபித்துக்காட்டினார்கள்.
ஒருநாள் சேவையாக ஒலிபரப்பான பாத்திமா எப்.எம். அனைவரது மனதிலும் பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை புடம்போட்டுக் காட்டியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 103.1 அலைவரிசையில் ஒலிபரப்பான இந்த வானொலியை கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல ஆயிரக்கணக்கான நேயர்கள் செவிமடுத்துள்ளனர்.
எவ்வித முன் அனுபமும் இல்லாத மாணவிகள் தங்களது கன்னி முயற்சியாக பாத்திமா எப்.எம். வானொலி சேவையை நடத்தியது பாடசாலை மாத்திரமல்லாது முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த கலையகத்துக்கு வருகைதந்த பழைய மாணவிகள் பலர், தங்களது காலத்தில் இவ்வாறானதொரு செயலை செய்யவில்லையே என வருத்தப்பட்டனர். அது மட்டுமல்லாது இவ்வாறான வானொலி ஒலிபரப்புகள் எதிர்காலங்களிலும் முன்னெடுக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்திலுள்ள கணனிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கலையகத்திலிருந்து வானொலி நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிரப்பு செய்யப்பட்டன. மாணவிகள் மாத்திரமே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். பாடசாலையில் கல்வி கற்று பல துறைகளிலும் வியாபித்திருக்கும் பல பெண்கள் கலையகம் வந்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறான பதிவுகள் காலத்தின் தேவையாகும்.
இஸ்லாமிய கலாசாரங்களை தழுவியதாக நிகழ்ச்சிகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டிருந்தன. ஒருசில குறைபாடுகள் இருந்தாலும் நிகழ்ச்சிகள் தரமாக அமைந்திருந்தன. தமிழ், சிங்கள் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானமை குறிப்பிடத்தக்க விடயமாகும். பாடசாலையில் தனக்கென தனியானதொரு ஊடகப்பிரிவினை ஆரம்பித்திருந்த பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, இந்த வானொலி சேவையினை நடாத்தியதன்மூலம் தனக்கென தனியானதொரு முத்திரையைப் பதித்துள்ளது.
நிகழ்ச்சிகள் கிராஅத்துடன் ஆரம்பமாகியது. அதன்பின் பாடசாலையின் வரலாறு வாசிக்கப்பட்டது. வித்தகர்களின் விபூஷகம் என்ற தலைப்பில் பாடசாலையில் கற்ற துறைசார்ந்த பெண்களைப் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றன. அதன்பின்னர் கல்லூரி அதிபர் திருமதி எச்.என். யூசுபின் நேர்காணல் ஆங்கிலத்தில் இடம்பெற்றது.
அதன்பின்னர் மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மாணவர் மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளின்போது இடையிடையே கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான விடைகளை பலர் எஸ்.எம்.எஸ். வாயிலாகவும், பேஸ்புக் வாயிலாகவும் தெரிவித்தனர். திரு திரு துறு துறு என்ற பெயரில் ஒரு கலகலப்பான நிகழ்ச்சி இடம்பெற்றது. சின்னஞ்சிறார்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நேயர்களிடமிருந்து அமோக வரவேற்புக் கிட்டியது.
அடுத்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொடர்பாக கல்லூரியின் பழைய மாணவியும் வைத்தியருமான சில்மியா ஷெரீபின் நேர்காணல் இடம்பெற்றது. மாதவிடாய் சம்பந்தமான பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இவர் கூறிய கருத்துகள் மாணவியர் மாத்திரமல்லாது அனைத்துப் பெண்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக நேயர்கள் கருத்து தெரிவித்தனர்.
தொலைபேசி வாயிலாக நேயர்கள் இணைந்துகொள்ளும் சிகரம் தொடு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இதன்போது நேயர்களின் அறிவை பரீட்சித்துப்பார்க்கும் நோக்கில் கேள்விகள் கேட்கப்பட்டன. சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிமூலமாக பல நிகழ்ச்சிகளை செய்து மாணவிகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். கல்லூரியில் கல்வி கற்று தற்போது தனியானதொரு அழகுக்கலை நிலையத்தை நடாத்திவரும் நஸ்ரினா ரமீஸ் அழகுக்கலை சம்பந்தமான விளக்கங்களை வழங்கினார்.
அதன் பின்னர், சமகால பிரச்சினைகளை அலசிஆராயும் வகையில் கல்லூரியின் பழைய மாணவிகளான சட்டத்தரணிகள் ருஸ்தியா பாறூக், இர்பானா இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டு சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக தெளிவாக விளக்கங்களை வழங்கினார்கள். சமூக அவலங்களின் சித்தரிப்பு, ஒரு சட்டரீதியான பார்வை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்குத் தேவையான பல விடயங்கள் தெளிவாக ஆராயப்பட்டன. இந்நிகழ்ச்சியை கல்லூரியின் பழைய மாணவி சுமையா ஜின்னா திறம்பட தொகுத்து வழங்கினார்.
அபகஸ் (Abacus) துறையில் இலங்கையிலிருந்து தெரிவான 4 பேரில் ஒருவரான பாத்திமா கல்லூரி மாணவியான மஹதியா அன்வர் கலையகம் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆங்கிலத்தில் நடைபெற்ற இவரது கலந்துரையாடலில் எண்கணிதம் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டபோது, ஒரே நொடியில் விடையளித்து ஆச்சரியப்படுத்தினார்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (20, 21) நடைபெற்ற கல்லூரியின் ஹஜ் விற்பனைக் கண்காட்சியின்போது, ஒருநாள் வானொலி சேவையாக பாத்திமா எப்.எம். கல்லூரி அதிபர் திருமதி எச்.என். யூசுபின் வழிகாட்டலின்கீழ் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(நன்றி: நவமணி)