Breaking
Fri. Jan 3rd, 2025

புத்தளம் தொகுதியில் காணப்பட்ட 2200 ஆசிரியர் வெற்றிடங்களில் 1200 வெற்றிடங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் உடனடியாக நிரப்பட்டுள்ளன. கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை நல்கி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் புதன்கிழமை (19) காலை நடைபெற்ற 2015 ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிக ஏ (A) சித்திகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கல்லூரி அதிபர் எஸ்.ஏ.சி. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
புத்தளத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வி புரட்சியின் தாக்கம் இன்று சகல பரீட்சைகளிலும் மாணவர்களை முன்னேற்றம் காண வைத்து வருகின்றது. மாணவர்கள் கல்வியிலே அதிகம் நாட்டம் வைத்து ஏ தர சித்திகளை அதிகம் பெற்று வருகின்றனர். புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தர புலமை பரிஸில் பரீட்சையில் முதல் 10 இடங்களை புத்தளம் மாவட்டத்தில் பெற்று சாதித்து காட்டியதும் இதன் வளர்ச்சிக்கு மற்றுமொரு முன் உதாரணமாகும்.


அரசு கல்விக்காக ஒதுக்கிய 02 சத வீத நிதியினை 06 சத வீதமாக உயர்த்தியுள்ளது. கல்வி அபிவிருத்தியில் அரசியல் வாதிகளாகிய நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். நமது தொகுதியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும் இத்தகைய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றமை பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.

மத்திய அரசாங்கத்தினால் புத்தளம் தொகுதியில் 39 பாடசாலைகள் அபிவிருத்திகென உள்வாங்கப்பட்டுள்ளன. இதில் 18 பாடசாலைகளில் நாம் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளோம்.


இந்த ஆண்டில் எமது நவவி கல்வி மேம்பாட்டு அமைப்பின் மூலமாக கணித பாடத்தில் அதிகமானவர்களை சித்தி அடைய செய்வதற்கான கல்வி திட்டத்தினை நம் ஆரம்பித்துள்ளோம். புத்தளம் தொகுதியில் கணித பாடத்தில் 100 க்கு 60 வீதமானவர்கள் 40 புள்ளிகளுக்கும் குறைவான புள்ளிகளையே எடுத்து வருகின்றனர். இதனை மேலோங்கச்செய்யும் விதத்தில் இதற்கென 1000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு 100 நாள் கல்வி திட்டத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம்.


மாணவர்களின் எதிர்காலம் மூன்று விடயங்களில் தங்கியுள்ளது. அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் ஆகிய மூன்று சமூகமும் ஒன்றிணைந்து செயற்படும்போது ஆக்க பூர்வமான ஒரு மாணவ சமுதாயத்தினை எம்மால் தோற்றுவிக்க முடியும்.


புத்தளம் நகரின் கிராமங்கள் தோறும் கல்வியிலே மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. சட்டத்தரணிகளாக, வைத்தியர்களாக மற்றும் அரச துறைகளில் அதிகரித்த வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஆண், பெண் இரு பாலாரும் கல்வி கற்பதில் மேலும் கரிசனை காட்ட முன் வரவேண்டும். அதற்காக அரசியல் வாதிகளான நாம் என்றும் உறுதுணையாக செயற்பட தயாராக உள்ளோம் எனக்கூறினார்.

14717067_1823824684568748_892816271994128836_n 14718593_1823824404568776_2352602947751950688_n

By

Related Post