கல்விச் சமூகத்தினதும் நலன் விரும்பிகளினதும் பூரண ஒத்துழைப்பு இருந்தால் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை மேலும் உயர்த்த முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மாவனல்லை, ஹெம்மாதகம அல்/அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும், அதனையொட்டி நடைபெறும் கல்விக் கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் நமது சமூகம் வாழ்ந்து வருகின்ற போதிலும், கல்வியில் நாம் உயர்வடைய வேண்டிய கடப்பாடு எழுந்துள்ளது. கல்வியில் நமது சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன விகிசாதரத்துக்கு ஏற்ப துறைசார் நிபுணர்களையும் புத்திஜீவிகளயும் உருவாக்கத் தவறியுள்ளோம். 1௦ சதவீதம் வாழ்கின்றோம் என பெருமைதட்டும் நாம், வைத்திய, பொறியியல், கணக்கியல், நிர்வாகம் சார்ந்த துறைகளில் உச்சநிலையை அடைந்துள்ளோமா?
ஒரு பாடசாலையின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள் முக்கியமானவர்கள். மாவனல்லை, ஹெம்மாதகம அல்/அஸ்ஹர் கல்லூரியின் பழைய மாணவர்களின் முன்மாதிரியை பாராட்டுகின்றேன். இந்த பாடசாலை நல்ல பெறுபேறுகளை அடைவதற்கு அவர்கள் உதவியதுடன், பாடசாலை நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கல்வித்துறையில் மிளிரும் சாதனையாளர்களை இப்பாடசாலை மேலும் உருவாக்க வேண்டுமென நான் பிராத்தனை செய்கின்றேன்.
பாடசாலைக்கு பஸ் ஒன்றின் தேவை பற்றி கோரிக்கை விடுத்தனர். பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் இந்த பாடசாலைக்கு பஸ் ஒன்று பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். கல்விக்கு உதவி செய்தோரை சமூகம் ஒரு நாளும் மறப்பதில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.அக்ரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், ஜம்இயத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி, ஜம்இயத்துல் உலமாவின் ஹெம்மாத்தகம பிரதித்தலைவர் அப்துல் நாசர், பிரதேச சபை உறுப்பினர் அஸாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு-