Breaking
Mon. Dec 23rd, 2024

கல்விதான் நமது சமூகத்தின் ஒரே ஒரு சொத்து. மாணவர்கள் அதனை அக்கறையுடன் கற்பதன் மூலமே முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்ற முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் க.பொ.த சாதாரண தரத்தில் நாடாளாவிய ரீதியில் 9 ஏ தர சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சங்கத்தின் தலைவர் எம்.இஸட்.எம்.அஹம்மட் முனவ்வர் தலைமையில் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இந்நிகழ்வு  நேற்று (06) நடைபெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் ஏ.கே.அப்துல் ஹமீட் அல்முல்லாவும் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டார். இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், இன்று முஸ்லிம் சமூகம் கல்வியிலே மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது நமது சமூகத்தின் விகிதாசாரத்திற்கேற்ப நாம் தொழில்சார் நிபுணர்;களை உருவாக்கத் தவிறிவிட்டோம். கணக்காளர்களும் பொறியியலாளர்களும் வைத்தியர்களும் முஸ்லிம் சமூகத்தில் மூன்று சதவீதத்திற்கு குறைவானவர்களாகவே இருக்கும் துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது. இந்தநிலை தொடர நாம் அனுமதிக்கக்கூடாது. கல்வி கற்பதற்கான அத்தனை சவால்களையும் நாம் முறியடித்து முன்னேற்றம் காணவேண்டும். சகோதர சமூகங்களின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்.

கல்வித்துறையில் உயர்வடைவதற்கு முஸ்லிம் தனவந்தர்களும் பரோபகாரிகளும் தாராளமாக கைகொடுத்து உதவ முன்வர வேண்டும் இறைவன் தந்த செல்வத்தின் ஒருபங்கை கல்வியின் மறுமலர்ச்சிக்காக வாரிவழங்குங்கள். கொடை வள்ளல் நளீம் ஹாஜியார் முஸ்லிம் தனவந்தர்களுக்கு ஒரு முன்மாதிரியான உதாரண புருஷர். அவர் தனது செல்வத்தை கல்விக்காக செலவழித்ததனால்தான் இன்று எத்தனையோ கல்விமான்கள் உருவாக வழியேற்பட்டுள்ளது. ஜாமியா கலாபீடம், இக்ரா தொழில்நுட்பக் கல்லூரி என்பவைகளை அமைத்து முஸ்லிம் சமூகத்திற்கு கல்வியின் மகிமையை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் மர்ஹூம்களான சேர் ராசிக் பரீத், டாக்டர் கலீல், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், ஏ.எம்.ஏ.அஸீஸ், எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றவர்ககள் கல்வியின் அருமை பெருமைகளை உணர்ந்ததனால்தான் எத்தனையோ தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்தனர். அவர்களை நாம் நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறோம்

கல்விச் செல்வம் என்றுமே அழியாத ஒன்று. உடுத்த உடையுடன் நிர்க்கதியாகி வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்று கல்வியை இழக்காத காரணத்தினால்தான் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அகதியாக வந்த நான் இன்று இந்த விழாவில் அதிதியாக இருப்பதற்கு கல்விதான் மூல காரணம். இனவாதிகளின் கூச்சலுக்கும் ஏச்சுக்களுக்கும் மத்தியில்தான் நான் பணியாற்றி வருகின்றேன். வில்பத்து விவகாரத்தை சம்பந்தப்படுத்தி எனக்கெதிராக எதிர்வரும் 19ம் திகதி எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றை நடத்துவதற்கு இனவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோன்று முல்லைத்தீவில் நான் காணி பிடிப்பதாகவும் முஸ்லிம்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பதாகவும் தமிழ் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு சிலர் அவதூறுகளை பரப்பி விருகின்றனர். எது எப்படியிருந்தபோதும் அடுத்த ஐந்தாண்டுகளில் முஸ்லிம் மாணவர்களின் கல்வியை முன்னேற்ற நாம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம் அதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளோம் முஸ்லிம் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்த அரசியலுக்கு அப்பால் நின்று பணியாற்றுவேன். பாடசாலை மாணவர்களாகிய நீங்கள் சர்வ கலாசாலைக்கு சென்ற பின்னர் கல்வியில் செருக்கை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. தலைக்கணம் என்று ஒன்று வந்துவிட்டால் உங்களால் தொடர்ந்தும் முறையாக கற்க முடியாது.

பல்கலைக்கழகங்களிலே விணான பொழுது போக்குகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டீர்களேயானால் அது கல்வியை நாசமாக்கிவிடும். அத்துடன் பல்கலைக்கழகங்களில் நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய பண்புகளுடனும் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். பிற சமூகத்தவரைத் திருப்திப்படுத்துவதற்காக இஸ்லாமிய பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது. அத்துடன் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபடவே கூடாது.

விரிவரையாளர்களையும் சக மாணவர்களையும் மதிக்கும் பண்பு உங்களுக்கு வரவேண்டும். இறைவனை முன்னிறுத்திய ஒழுக்கத்துடனான உயர்கல்வியே உங்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக நகர்த்திச் செல்லும் இவ்வாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

இந்த விழாவில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தார் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்ஸூர், தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபர் ஆகியோர்களும் உரையாற்றினர். முhணவர்களுக்கு பணமும் பரிசுப் பொதியும் வழங்கப்பட்டன. அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் உட்பட முக்கிய அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

கல்வி முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் எஸ்.எம்.ஹிசாம் நிகழ்ச்சிகளை தொகுத்து நெறிப்படுத்தினார்

By

Related Post