Breaking
Mon. Dec 23rd, 2024

-A.S.M. Javid –

தற்போது சில ஊடகங்கள் முஸ்லிம்களை மலினப்படுத்தியும் கேவலப்படுத்தியும் செய்திகள் வெளியிடுவது ஆபத்தான நிலைமையாகும் என வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு-12 வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் கே.எம்.எம்.நாளிர் தலைமையில் மருதானை டவர் மண்டபத்தில் இடம் பெற்றபேதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மிக மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப்பாட சலையின் கல்வி வளர்ச்சியைப் பார்க்கும் போது அதன் முன்னேற்றம் உயர்ந்து வருகின்றது. இன்று கொழும்பு மாவட்டத்தில் பல முஸ்லிம் பாடசாலைகள் வளப்பற்றாக் குறைகளோடே காணப்படுகின்றன. கல்வியே எமது சமுகத்திற்கு முக்கியமானதாகும்.

கொழும்பு மாவட்டத்தினை கல்வியால் முன்னேற்றும் வகையில் மாகாண சபை உறுப்பினர் பாயிசிடம் அதனை முன்னெடுக்க கூறியுள்ளேன். அவர் கல்விக்காக நிறைய விடயங்களைச் செய்து வருகின்றார். அதற்கு எனது பூரண ஒத்துழைப்பு இருக்கின்றது. கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது இந்த கொழும்பு மாவட்ட மக்களின் கல்வி மற்றும் ஏனைய பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடிந்தது. அதன் மூலம் இந்த மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

இன்று முஸ்லிம்களின் சகல நடவடிக்கைகளையும் முடக்கும் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன உலகில் சுமார் 50க்கும் அல்லது 54க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன இவற்றில் நாளாந்தம் வெடிச்சத்தங்களும், கொலைகளும், மரணங்களும் இடம் பெற்று வருகின்றன. எல்லா வகையான வளங்களைக் கொண்டும் இந்த நாடுகள் இன்ற நிம்மதி இல்லாமல் இருக்கின்றன. இதேபோல் நூற்றுக் கணக்கான நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கும் அநியாங்களைச் செய்து வருகின்றனர். ஒரு சிறு கூட்டத்தினரே இன்று சகல வசதி வாய்ப்புக்களுடனும் இருக்கின்றனர். அவர்கள் கல்வியிலும் அதி உச்சத்தில் இருந்து உலகத்தை ஆட்டிப் படைக்கின்றனர்.

இன்று ஒருசில தனியார் ஊடகங்கள் தமது பார்வையை முஸ்லிம் சமுகத்தின் மீது அதிகம் செலுத்தி வருகின்றன. முஸ்லிம்களை அழித்து கருவறுக்கும் நோக்கில் சில மேலைத்தேய சக்திகள் முஸ்லிம்கள் மீது தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. ஊடக தர்மத்திற்கும், அதன் நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தனியார் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

இந்த ஊடகங்கள் காலாகாலமாக முன்னெடுத்து வரும் இச்செயற்பாடுகள் முஸ்லிம் சமுகத்திற்கு ஆபத்தானதாகும். பண பலத்தையும், ஊடக பலத்தையும் பயன்படுத்தி இஸ்லாத்தை அழிக்கவே வேண்டுமென்று மேலத்தேய சில பலம் பொருந்திய நாடுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. அண்மைக் காலமாக இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தின் மீது அவர்கள் தமது எச்சசொச்ச தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பின்னணியிலேயே இலங்கையில் உள்ள சில தனியார் ஊடகங்களும் முகநூல்களும் முஸ்லிம்களை மலினப்படுத்தியும், கேவலப்படுத்தியும் தமது முழு நேரத்தினையும் தொழிலாகக் கொண்டு செயற்படுகின்றன. இந்த நிலைமைகள் முஸ்லிம் சமுகத்திற்கு ஆபத்தானதாகும். முஸ்லிம் சமுகத்திலும் திறமையான ஆற்றலுள்ள ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர்.

அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபரிகின்ற போதும் அவர்கள் சுதந்திரமாகவோ, உண்மையாகவோ தமது சமுகத்தைப் பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியாது திண்டாடுகின்றனர். ஊடக நிறவனங்களில் நிகழ்ச்சி நிலல்களுக்கு கட்டுப்பட்டு இவர்கள் எழுதா விட்டால் பல்வேறு பிரச்சினைகளை அனுபவிக்க வேண்டி அபாயமும் அவர்களுக்கு இருக்கின்றன. கைகட்டடி, வாய் பொத்தியே அவர்கள் தமது ஊடக தொழிலை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

நமது சமுகத்தினை ஊடக மாபியாக்களின் ஆபத்துக்களில் இருந்தும் அதன் அச்சுறுத்தல்களில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்றால் எமது சமுகம் கல்வித் துறையிலும், ஊடகத்துறையிலும் நாம் உயர் நிலைகளை அடைய வேண்டும். இதுதான் யதார்த்தம் தங்களிடம் இருக்கின்ற ஊடக உரிமையையும், ஊடக வளத்தையும் பயன்படுத்தி எம்மை அழிக்கும் இந்த நாசகார செயற்பாடுகளுக்கு நாம் இடமளிக்கக்ககூடாது. நாட்டின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் தங்களை அர்ப்பணித்து பல்வேறு தியாகங்களைப் புரிந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது இனவாத சக்திகள் இவ்வாறு நடப்பது வேதனையானதாகும். இதில் நிறையவே மறைகரங்கள் தொழிற்படுவது வெட்ட வெளிச்சமான உண்மை. நாம் செய்த தியாகங்களை கணக்கிலெடுக்காது எம்மை கறிவேப்பிலைகளாக பயன்படுத்திவிட்டு இப்போது நன்றி மறந்தவர்களாக சில ஊடகங்களும், அரசியல் சக்திகளும், தொழிற்பட்டு வருகின்றன.

இந்த நாட்டிலே நிம்மதியாக வாழுகின்ற சமுகங்களிடையே பிளவுகளை உருவாக்கி சிங்கள, முஸ்லிம் மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர்காய முடியுமென அங்கலாய்த்து வரும் சக்திகளுக்கு இனவாத ஊடகங்களும், அவ்வூடகங்களின் பிரதானிகளும் தீன போடுகின்றனர். இவர்கள் மற்றுமோர் இரத் ஆறை இலங்கையில் ஓடச்செய்து முஸ்லிம் சமுகத்தின் பொருளாதாரத்தினையும், வளங்களையும் அழித்தொழிப்பதே இவர்களின் உள் நோக்கமாக அமைகின்றது.

தலை நகர் கொழும்பில் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் கேந்திரமான இடமாகும். அனைவரினதும் பார்வையும் இங்குதான் இருக்கின்றது. கொழும்மில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் அறபு நாடுகளில் இருந்தும் வருகின்ற இராஜ தந்திரிகளும், கல்விமான்களும், நிபுணர்களும் கொழும்பிலே முஸ்லிம்கள் சந்தோசமாக வாழ்க்கை நடாத்துவதாகவே கருதுகின்றனர்.

தலை நிமிர்ந்து நிற்கும் அழகான பள்ளிவாசல்களையும், மத்ரஸாக்களையும் அவர்கள் காணுகின்றபோதும், அங்கே செல்கிலுகின்ற போதும் இவ்வாறானதொரு எண்ணம் ஏற்படுவத இயல்பே ஆனால் உண்மை நிலை மாற்றமானது கொழும்பு வாழ் முஸ்லிம்களின் கல்வித்தரம் மிகவும் பின்னடைந்திருக்கின்றது என்பது பரம இரகசியமே.

வெளியில் உள்ளவர்கள் கொழும்பு முஸ்லிம்கள் கல்வியியே உயர்ந்து நிற்கின்றார்கள் என்ற மாயை தோற்று விக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித் தரம் மற்றும் பெறுபேறுகளுடன் ஒப்பிடும்போது கொழும்பு மாணவர்கள் கல்வியிலே பாரிய வீழ்ச்சி நிலையில் இருக்கின்றனர். நாங்கள் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின்படி கொழும்பு மக்களின் கல்வித்தரம் பின்னடைவு கண்டுள்ளதை உணர்கின்றோம்.

பகீரதப் பிரயத்தனப்பட்டு இவர்களின் கல்வியை உயர்த்த வேண்டிய தேவை எமக்குள்ளது. இது தொடர்பில் பேதங்களை மறந்து சமுகத்தலைமைகள் ஒன்றுபட்டு ஜனாதிபதியையும், பிரமதரையும் சந்தித்து கொழும்பு முஸ்லிம்களின் கல்வி உள்ளிட்ட ஏனைய பிரதேச மக்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

கொழும்பில் முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் முஸ்லிம் பெண்கள் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான காணியொன்றை பல கோடி ரூபாய் செலவில் நாங்கள் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதேபோல் கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்வித் தேவைகளைக் கருத்திற் கொண்டு அங்கும் பாடசாலை ஒன்றை அமைத்தால் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க முடியும் என்பதுடன் பாடசாலைக்கே செல்லாமல் வீட்டில் காலத்தைக் கழிக்கும் மாணவர்களின் கல்விக்கும் உயிருட்ட முடியுமெனவும் நாம் நம்புவதாகவும் அமைச்சர் றிஷாத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள். பழயை மாணவர்கள், பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், நலன் விரும்பிகள். எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

By

Related Post