Breaking
Mon. Dec 23rd, 2024

– முஹம்மது சனாஸ் –

மலையக தோட்டப்புற தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாடினார்.

அதேவேளை,  இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கல்வி அமைச்சரை சந்தித்து நீண்ட கலந்துரையாடல்களை செய்திருந்தனர்.

அதேவேளை, நேற்றைய  சந்திப்பின்போது கொலன்னாவ பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் கொலன்னாவயில் புதிய பாடசாலை ஒன்றினை ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பிலும், வருமானம் குறைந்த பெற்றோர்கள் இப்பிரதேசத்தில் அதிகமாக காணப்படுவதால் அவர்களது பிள்ளைகளின் கல்வி  முன்னேற்றத்தை கருத்திக் கொண்டு துரித கதியில் இப்பிரதேசத்தில் பாடசாலையொன்றினை அமைக்க வேண்டும் என்ற கோறிக்கையினை மீண்டும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று எழுத்து மூலமாக கல்வி அமைச்சரிடத்தில் கையளித்துள்ளதாக அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, நீண்டகாலமாக பாடசாலைகளில் இஸ்லாம் பாட  ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு இருப்பதால் அந்த இடை வெளியினை நிரப்பும் வகையில் மௌலவி ஆசிரிய நியமனத்தின் அவசியம் குறித்து கல்வி அமைச்சருக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் விளக்கப்படுத்தியுள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்துவதாகவும் மலையக தோட்டப்புர தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய ஆட்சேர்ப்பு தொடர்பில் புதிய நடை முறையொன்றை அமுல்படுத்துவது தொடர்பில் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டுவருவதாகவும், ஏனைய வேண்டுகோள்கள் காலக்கிரமத்தில் உள்ளீர்க்க ஆவணம் செய்வதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post