-விடிவெள்ளி ARA.Fareel-
கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவம் இனவாத செயலல்ல. மது போதையில் இருந்தவராலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுவொரு சிறிய விடயம் இதனை பெரிது படுத்த வேண்டாம். பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாகவே வாழ விரும்புகிறார்கள் என அங்கும்புர இஹலமுல்ல பன்சலையின் இஹலமுல்ல சுகுன குணவன்ச தேரர் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சரிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹலீம் “கல்ஹின்னை சம்பவத்தினையடுத்து சிலர் இனவாதத்தைத்தூண்ட முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. கல்ஹின்னை மற்றும் அங்கும்புர பகுதிகளில் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
அமைச்சர் ஹலீம் நேற்று முன்தினம் மாலை அங்கும்புர இஹலமுல்ல பன்சலைக்கு விஜயம் செய்தார். அமைச்சருடன் முஸ்லிம்களும் பன்சலைக்குச் சென்றனர். அங்கும்புர மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிசாரும் அங்கு சென்றிருந்தனர்.
அங்கு இருதரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கல்ஹின்னை சம்பவத்தையடுத்து அப்பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவது தெடர்பில் ஆராயப்பட்டது.
இச்சந்தர்ப்பத்திலே இஹலமுல்ல பன்சலையின் தேரரும் அமைச்சர் ஹலீமும் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம் கல்ஹின்னை சம்பவம் தொடர்பில் விடிவெள்ளிக்குக் கருத்து தெரிவிக்கையில், இருதரப்பு மதத்தலைவர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்களுக்கிடையிலான சந்திப்பொன்றினை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் முதல் கட்டமாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆறு பேரையும் பிணையில் விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. பிணை வழங்குவதை பொலிசாரும் எதிர்க்கவில்லை. நாளை புதன்கிழமை சந்தேகநபர்கள் அறுவரும் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவர்களில் ஒருவர் முஸ்லீம் இளைஞராவார். சந்தேகநபர்கள் விளக்கமறியலில் இருப்பதே சமாதான முயற்சிக்குத் தடையாக இருக்கிறது.
பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் சமாதானமாக பிரச்சனைகள் இன்றி வாழ்வதையே விரும்புகின்றனர். ஒரு சிலரே பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றனர். இவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது மதத்தலைவர்களின் கடமையாகும்.
கல்ஹின்னை பிரதேசத்தில் இனவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பிரதமர் இதற்கான உத்தரவுகளைப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளார் என்றார்.
இதேவேளை கல்ஹின்னை பகுதியில் இடம்பெற்று வந்த இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.