ஊடகப்பிரிவு
உலகப் பெருங் கவிஞரும், தமிழ் பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரஹமானின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பாரிய இழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவிக்கோவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வானம்பாடி இயக்க கவிஞர்களோடு இணைந்து இயங்கிய தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்த தமிழ் பேராசானின், எழுத்துக்களின் தாக்கம் இலங்கை எழுத்தாளர்களையும் ஆகர்ஷித்ததுடன் அவர்களை எழுதத் தூண்டியது. அதுமாத்திரமன்றி சிறந்த எழுத்தாளர்களாகவும் அவர்களை ஆக்கியது. பேராசிரியர் கவிக்கோ தமிழில் ஹைக்கூ,கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை புனைந்ததிலும், அவற்றை பரப்பியதிலும் முன்னணி வைத்தவர்.
கவிக்கோ இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவராக இருந்து தனது வாழ் நாளில் ஒன்பது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றார். 2014ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாடு இசைக்கு முக்கியத்துவம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கவிக்கோ சிறந்த தமிழ்ப் பற்றாளர். நல்ல பண்பாளர், விருந்தோம்பும் பண்பு உடையவர்.
தமிழ் வாழும் தோறும் கவிக்கோவின் எழுத்துக்கள் வாழும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக.