உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் பிரகாரம் வருடமொன்றுக்கு உலகளவில் 5 இலட்சம் பேர் காச நோயினால் உயிரிழப்பதோடு இலங்கையை பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு மாத்திரம் 14 ஆயிரம் பேர் இந்நோயினால் பாதிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்தது.
மக்கள் மத்தியில் இந்நோய் தொடர்பில் எவ்வளவு தூரம் தெளிவின்மை காணப்படுகின்றதோ அந்தளவில் இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையினை குறைத்து காச நோயினை எமது நாட்டில் முற்று முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் எனவும் தெளிவுபடுத்தியது.
இம்மாதம் 24ஆம் திகதி உலக காச நோயினை முன்னிட்டு இந்நோய் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்துவதன் மூலம் மக்களை தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு நேற்று கொழும்பில் அமைந்துள்ள சுகாதாரக் கல்வி பணியகத்தில் இடம் பெற்றது.
இச்செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மஹிபால ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய சுகாதார பணிப்பாளர் மஹிபால ஹேரத், காசநோயினால் உலகளவில் 5 இலட்சம் மக்கள் வரை உயிரிழப்பது தொடர்பில் சுகாதார உலக ஸ்தாபனம் தகவல் வழங்குகின்றது. அந்தவகையில் இந்நோயின் தாக்கமானது குறிப்பிட்டு கூறும் அளவு பாரதூரமானதல்ல.
அந்த வகையில் இந்நோய் தொடர்பில் தெளிவின்மையுடன் செயற்பட்டு தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கான சிகிச்சையினை பெறும் பட்சத்தில் குறித்த நோயினால் பாதிக்கப்படும் ஒருவர் வழமையான நிலைக்கு மாறிவிடுவார்.
எமது நாட்டைப் பொறுத்தவரை குறித்த நோய் தொடர்பிலான பரிசோதனைகள் உட்பட சிகிச்சை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் 26 மத்திய நிலையங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில் இந்நோயினால் பாதிக்கப்படும் ஒருவர் மேற்படி எமது நிலையங்களில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். மறுபுறம் இந்நோயினால் பாதிக்கப்படும் ஒருவர் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் நிலையானது மாற வேண்டும். அந்தவகையில் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தல்கள் அவசியமாகும்.
இந்நோயினால் பாதிக்கப்படுபவர்கள், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை குறுகிய காலத்தில் நாம் சேகரித்து அவர்களுக்கான சிகிச்சைகளை உரிய வகையில் வழங்கும் பட்சத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் பிரகாரம் குறுகிய காலத்தில் இந்நோயினை நாட்டிலிருந்து முழுமையாக அகற்றலாம் என்றார்.