Breaking
Thu. Jan 16th, 2025
மூதாதையர்கள் வாழ்ந்த பூமியைவிட்டும்
மூன்றே நாட்களில் துரத்தியதை நினைக்கும்போதும் –  வலிக்கவில்லை…
ஐந்து சதம் கூட இல்லாமல்
உடுத்த உடையுடன் போகும் போது
காதில் இருந்து இரத்தம் சொட்ட பிடுங்கப்பட்ட நகைகளையும்,
பதின்னான்கு நாள் வயது மகனை மழையில்
நனைந்து கொண்டே நான் மடியில் சுமந்ததை
நினைக்கும் போதும் வலிக்கவில்லை…
சோற்றுக்கே அல்லல்படும் நேரம்
எங்கே பூர்வீகத்தை மீண்டும் அடைவது என்ற
முகாம்களின் முனகல்களை மீண்டும் அசைபோடும் போதும் வலிக்கவில்லை…
என் வீட்டுக் கூரை உனது வீட்டுக் கூரையானதையும்
ஊர் பள்ளிவாசல் கூரை உனது பக்கத்து வீட்டுக்காரனுடையதாக இருந்ததை நினைக்கும் போதும் வலிக்கவில்லை…
ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் வலிக்கின்றது…
குமராகி மூன்றே மாதங்களில்
உனது மகளை துவக்குத் தூக்க வைத்த விடுதலைப் போராளி;
பின்னொரு நாளில்
இராணுவ உளவாளியாய்
உன்பக்கத்து வீட்டிலே இருந்த போதில்,
“காட்டிக் கொடுத்தவர்கள்” அதனால் துரத்தப்பட்டவர்கள்
என்று கூறியதை மட்டும்தான் தாங்க முடியவில்லை…
ஆனாலும் என்ன செய்வது?
ரம்ஸானுக்கு வட்டிலப்பமும்
தீபாவளிக்கு உன் வட்டியில் அப்பமும்
பரிமாறப்படாமல் இருந்ததில்லையே!!!
                                                         Thaj Azree

Related Post