மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டு யானைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாயான தம்பிராசா சுயமலர் (வயது 17) என்பவரின் கர்ப்பத்தில் இரட்டை சிசுக்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் அவரது கணவனும் காட்டு யானையால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விக்ரம ஆராச்சியின் அறிக்கையில் 17 வயதான இந்த இளம் கர்ப்பிணித் தாய்க்கு காட்டு யானைத் தாக்குதலால் தலையில் இரு வெடிப்புகள் ஏற்பட்டதால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை குடிசைக்குள்ளே புகுந்து தாக்கியதில் இளம் கர்ப்பிணியின் கணவரான மோகனதாஸ் (வயது 30) விலா எலும்பில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் சார்ஜன்ட் கே. நாகராசா சாட்சியங்களை நெறிப்படுத்தினார்.