காணாமற்போயுள்ளதாகக் கூறப்படுகின்ற நான்கு கடற்படை சிப்பாய்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து முல்லைத்தீவு மற்றும் சுண்டிங்குளம் ஆகிய கடற்படை முகாம்களில் கடமையாற்றிய நிலையில், இந்த கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயிருந்தனர்.
இதேவேளை, அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் S.W.M.சேனாரத்ன முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் இதன் போது உறவினர்கள் ஊடகங்களுக்குக் காண்பித்தனர்.
பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கினங்க கெப்பித்திகொல்லேவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் இது குறித்து விசாரணை செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் கடற்படை சிப்பாய்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்துவதற்கு எவ்விதமான சாட்சியங்களும் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று சிரேஷ்ட உதவி செயலாளரை சந்தித்து காணாமற்போயுள்ள கடற்படை சிப்பாய்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை முன்னெடுக்குமாறு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 4 ஆண்ட காலமாக காணாமற்போன அதிகாரிகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியபோதிலும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.