காத்தான்குடி பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (14.6.2016) மாலை காணாமல் போன இரண்டரை வயதுயை குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள கர்பலா கிராமத்தில் வைத்து மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஜன்னத் மாவத்தையைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தையான எம்.ஜே.ஜியாஸ் எனும் ஆண் குழந்தையொன்று (14.6.2016 செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளது.
வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த இந்தக் குழந்தை காணாமல் போனதையடுத்து பெற்றாரும், உறவினர்களும், அயலவர்களும் குழந்தையை தேடியுள்ளனர்.
இந் நிலையில் குறித்த குழந்தை காத்தான்குடி ஜன்னத் மாவத்தையிலிருந்து சுமார் மூன்று கிலேமீற்றருக்கு அப்பாலுள்ள; காத்தான்குடிக்கு அருகிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தின் கர்பலா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கர்பலா கிராமத்திலுள்ள வெற்றுக் காணியொன்றுக்குள் குழந்தை ஒன்று நிற்பதைக் கண்ட அப்பகுதியச் சேர்ந்த சிலர் குழந்தையை மீட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தைகள் மீதான கவனம் குறித்தும், குழந்தைகளின் பராமரிப்பு குறித்தும் தாய்க்கு ஆலோசனை வழங்கிய காத்தான்குடி பொலிசார் தாயிடம் குழந்தையை ஒப்படைத்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இந்தக் குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணைகளை மேற் கொண்டுவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.