மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பாலைநகர் பகுதியினைச் சோ்ந்த 13 வயதுடைய மாணவி முஹம்மது அலியார் பாத்திமா அஸிமா கடந்த 27ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும்போது காணாமல் போயுள்ளார்.
இவரை கண்டுபிடித்து தருமாறும்.இதன் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இக்குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுகோரி தியாவட்டவான் ஹுசைனியா ஜிம்மா பள்ளிவாயல் மற்றும் பாலை நகர் றகுமானியா ஜும்மா பள்ளிவாயல்கள் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்பு குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி வழியாக கையில் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்று கோஷங்களை எழுப்பி கவனஈர்ப்பு போராட்டத்தினை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மேற்படி விடயம் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலாளரிடம் காணாமல் போயுள்ள பாத்திமா அஸிமாவின் பெற்றோர் கையளித்தனர்.குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பாலை நகர் மத்ரஸா குறுக்கு வீதியைச் சோ்ந்த முஹம்மது அலியார் பாத்திமா அஸிமா எனும் மாணவி கடந்த 27 ஆம் திகதி அன்று பாடசாலைக்கு செல்லும்போது காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
எனினும் இதுவரை காணாமல் போன குறித்த மாணவி கண்டு பிடிக்கப்படவுமில்லை.இது குறித்து புலனாய்வு தொடர்பான முன்னேற்றங்கள் நீதிமன்றத்திற்கு உரிய காலத்திற்குள் அறிக்கையிடப்படவுமில்லை.
எனவே குறித்த மாணவி கண்டு பிடிக்கப்பட வேண்டும்.இதன் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.
இக் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.