(BBC)
வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை.
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் நாளாந்தம் அதிகரித்து வரும் இத்தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை சுடுவதற்கு காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது.
இதற்கான அனுமதி நகர சபை நிர்வாகத்தினால், பாதுகாப்பு அமைச்சிடம் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நெரிசல் மிகுந்த காத்தான்குடி பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை கலைப்பதற்கு வனவிலங்குத்துறை அதிகாரிகளின் உதவி கோரப்பட்டபோது, அவர்கள் ஆட்கள் பற்றக்குறை உள்ளது என்று கூறியதாக, நகரசபைத் தலைவர் அஸ்வர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனவே, அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பேரில் துப்பாக்கியொன்றை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அதற்கான அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே துப்பாக்கிப் பயிற்ச்சி பெற்று சிவில் பாதுகாப்பு படையில் பணியாற்றிய சிலர், தற்போது நகர சபையில் பணியாற்றுவதால் தம்மால் அதை சமாளிக்க முடியும் என்று நம்புவதாக நகரபைத் தலைவர் கூறுகிறார்.
காத்தான்குடிப் பிரதேசத்தில், இந்த ஆண்டு மட்டும் 45 சிறுவர்கள் உட்பட சுமார் 75 பேர் குரங்குளின் கடிக்குள்ளாகி காயமடைந்துள்ளார்கள். என்றும் அவர் கூறுகின்றார்.
குரங்குகளின் நடமாட்டம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், அந்த இடத்திற்கு நகரசபை பணியாளர்கள் ஒலிபெருக்கி வாகனம் சகிதம் விரைந்து குரங்குகள் சுடப்படுவது தொடர்பாக அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் நகர சபைத் தலைவர் எஸ். எச் . அஸ்வர் குறிப்பிட்டார்.