பழுலுல்லாஹ் பர்ஹான்
இலங்கையில் கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்றுவந்த கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் நினைவாக இலங்கை அரசாங்கத்தினால்; பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாயல் வடிவில் காத்தான்குடியில் மிகப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் ஒன்று துரிதகெதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
புதிய காத்தான்குடி முஹைதீன் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் இருந்த இடத்தில் துரிதகெதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இப் பள்ளிவாயலின் கட்டுமானப் பணிகளை சவூதி அரேபிய நாட்டின் அரச பிரதிநிதி யஹ்யா பின் அப்துல்லாஹ் அஸஸூஹைரீ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) உள்ளிட்ட குழுவினர் குழுவினர் 10-10-2014 இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.
யுத்தம் முடிவுற்று நாட்டில் அமைதி ஏற்பட்ட பின்னர் தமிழ்,முஸ்லிம் ,சிங்கள,கிறிஸ்தவ ஆகிய நான்கு மதத்தவர்களின் வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டார்.
இதனடிப்படையில் சமாதானத்தை ஞாபகப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இப் பள்ளிவாயல் காத்தான்குடி கடற்கரை வீதியில் 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் சுமார் 5000 ஐயாயிரம் பேர் தொழுகையை நிறைவேற்றும் வகையில் மூன்று மாடிகளைக் கொண்டு கலாசார மத்திய நிலையம்- நூலகம் மற்றும் 65 அடி அகலமான குப்பாவுடன் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.