Breaking
Thu. Dec 26th, 2024

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸை பணித்துள்ளார்.

இம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்குமாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவை இன்று காலை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

இதே வேளை இன்று (20) சனிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கை பற்றி ஆராயும் விஷேட கூட்டத்திலும் பிரதியமைச்சர் கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்தார்.

இக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர, அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.இன்பராஜன், இரானுவ அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தற்காலிக முகாம்கள், உறவினர் விடுகளில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு சமைத்த உணவு வழங்க பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த அடை மழையால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 8493 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1239 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் 11 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும் காத்தான்குடி பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related Post