Breaking
Sun. Dec 29th, 2024

காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டஇஸ்லாமிய நூதனசாலைதொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்..எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்நிலையில் மனிதர்களை ஒத்த உருவச்சிலைகளை உள்ளடக்கியதான நூதனசாலையொன்று அங்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், அது சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பைக் கோரியும் ஜம்இய்யாவின் காத்தான்குடிக் கிளை 21.03.2015ஆம் திகதியில் கடிதமொன்றை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது.

மேற்படி கடிதம் தொடர்பாக ஆராய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு கடந்த 26.03.2015 வியாழக்கிழமை ஒன்று கூடியது. அக்கூட்டத்தில் மேற்படி விடயம் ஆழமாக ஆராயப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் M,L.A.M. ஹிஸ்புல்லா அவர்களுக்கு இதனது விபரீதங்களை விளக்கி கடிதமொன்றை அனுப்பி வைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கடிதம் தயார் செய்யப்பட்டு அனுப்பும் தருவாயில் 30.03.2015 ஆந் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை நகர முதல்வராகிய தாங்கள் அனுப்பி வைத்திருந்தீர்கள். அக்கடிதத்தில் குறித்த நூதனசாலையை அவசரமாகத் திறக்க வேண்டியுள்ளதால் இதனை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு காத்தான்குடிப் பிரதேசத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஷரீஆ அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டிருந்தீர்கள்.

தங்களையும் தங்களது வேண்டுகோளையும் மதித்து, தயாரிக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி வைப்பதைப் பிற்படுத்தியதுடன் கடந்த 08.04.2015 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக் குழுவினர் பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் மத்தியில் தங்களது வேண்டுகோளை மதித்து நூதனசாலையை நேரில் வந்து பார்வையிடுவதற்குத் தயாரான பொழுது, தாங்கள் அவசரமாக இந்தியா செல்லவிருப்பதாகவும், 12.04.2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவதாகவும், அதற்குப் பின்னால் குறித்த நூதனசாலையைப் பார்வையிட ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருந்தீர்கள்.

தாங்கள் இந்தியாவுக்குச் சென்றாலும் பிறிதொரு நபர் மூலமாவது நூதனசாலையைத் திறந்து காட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மறுத்த தாங்கள், ஜம்இய்யாவின் பத்வாக் குழுவினர் பார்வையிடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படாத நிலையில் 15.04.2015 ஆம் திகதி புதன்கிழமை நூதனசாலையை மக்கள் பார்வைக்குத் திறந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி போன்ற நகரில் மேற்படி நிகழ்வு வருத்தத்தையும், ஏமாற்றத்தையுமே தருகின்றது என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

பொதுவாக முஸ்லிம்கள் உருவச் சிலைகளை வணங்கவோ, அவற்றைக் கண்ணியப்படுத்தவோ அல்லது ஞாபகச் சின்னங்களாக வைத்திருக்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது விடயத்தில் ஹதீஸ்களில் மிகக் கடினமான எச்சரிக்கைகள் வந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரும் மறுமை வாழ்வை முன்னிறுத்திச் செயல்படுவது அவசியம் என்பதை ஞாபகமூட்டிக் கொள்கிறோம்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலலாஹி வபரகாத்துஹு
(ஒப்பம்) எம்..எம். ஹாரிஸ் ரஷாதி
இணைப்பாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

பிரதி: காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா

– புவி. எம்.. றஹ்மதுழ்ழாஹ்

Related Post