Breaking
Mon. Jan 13th, 2025

அரசியல் சதுரங்கத்திலே எவ்வாறு காய் நகர்த்தலாம் என்ற விடயத்திலே சரியாக நகர்த்தியதன் மூலமே ஓட்டமாவடி பிரதேச சபையில் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது என்று மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை மற்றும் பதுரியா கிராமங்களில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

ஓட்டமாவடி பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏழு ஆசங்களையும் முஸ்லீம் காங்கிரஸ் எட்டு ஆசனங்களையும் பெற்று இருந்த நிலையில் எங்களது அரசியல் அனுபவத்தால் ஆட்சியை நாங்கள் கைப்பற்றினோம்.

இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு வருடத்திற்கு ஒருவர் தவிசாளர் என்ற உடன்படிக்கையில் முதலாவது இரண்டு வருடம் தவிசாளர் அஸ்மிக்கும் கடைசி இரண்டு வருடமும் நௌபருக்கும் வழங்கப்படும் என்ற எழுத்து மூலமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அந்த ஒப்பந்தத்தில் நௌபர் அவர்கள் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும் அப்போது தான் அந்த ஒப்பந்தம் உண்மையானதாக இருக்க முடியும்.

 

ஒப்பந்தத்தில் இரண்டு பேர் கையொப்பம் வைத்து விட்டு அதில் ஒருவரான நௌபர் நம்பிக்கை இழந்தவராக இருப்பாரானால் அந்த ஒப்பந்தம் செய்ததில் அர்த்தம் இல்லாததாக மாறிவிடும் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் நம்பிக்கை வைப்பதுடன் சபையில் உள்ள ஆளுந்தரப்பு உறுப்பினர்களோடும் சேர்ந்து செல்கின்ற பக்குவத்தை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் அதில் வெற்றியை காண முடியும்.

அரசியலை அரசியலாக செய்ய வேண்டும் இரண்டு வருட ஒப்பந்தம் தொடர்பாக பொது மக்களுக்கு சந்தேகங்கள், கிலேசங்கள் எழத்தான் செய்யும் அதனை நௌபர் அவர்கள் தெளிவு படுத்த வேண்டும் அதற்கு முதல் அவர் நம்பிக்கை வைக்க வேண்டும் அவர் நம்பிக்கை வைக்கா விட்டால் அவரால் சந்தேகத்தோடு உள்ள மக்களிடம் எவ்வாறு தெளிவுபடுத்த முடியும் அது முடியாத காரியம்.

முதல் இரண்டு வருடத்திற்கு அஸ்மியும் இரண்டாவது இரண்டு வருடத்திற்கு நௌபரும் என்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏதாவது ஏமாற்று வேலைகள் இடம் பெறுமாக இருந்தால் ஒட்டு மொத்தமாக கல்குடா முஸ்லீம் பிரதேசத்திற்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்குமே தவிர அது தனிப்பட்ட முறையில் நௌபருக்கோ மாஞ்சோலை பதுரியா பிரதேசத்திற்கோ செய்கின்ற துரோகமாக இருக்காது.

மாஞ்சோலை மற்றும் பதுரியா பிரதேச மக்கள் எப்போதும் எனது அரசியலுக்கு அதிகம் பங்களிப்பு செய்த மக்கள் அதே போன்று கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் அதிகமான வாக்கினை அளித்தவர்கள் நானும்; அதிகமான பணத்தினை இப்பகுதியின் அபிவிருத்திக்காக செலவு செய்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் கழக குறுக்கு வீதி, மாஞ்சோலை மையவாடி சுற்று மதில் அர்றஹ்மான் வீதிக்கான வடிகான் என்பன அமைப்பதற்காக மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சினால் இருபத்தாறு லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் கழக வீதி காபட் வீதியாக அமைப்பதற்கு “ஐ” திட்டத்தில் அமையப்பெறவுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச பள்ளிவாயல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-முர்ஷிட் கல்குடா-

Related Post