359 ஆபிரிக்க காட்டு யானைகளின் தந்தங்கள் காலி முகத்திடலில் இன்று (26) அழிக்கப்பட்டன.
காலி முகத்திடலில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த யானை தந்தங்கள் அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
சர்வதேச சுங்கத் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
குறித்த காட்டு யானை தந்தங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
தெற்காசியாவில் முதற்தடவையாக இவ்வாறான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி கென்யாவிலிருந்து இலங்கை ஊடாக டுபாய்க்கு கப்பல் மூலம் சட்டவிரோதமாக கொண்டு சென்றுக் கொண்டிருந்த தருணத்தில் இந்த யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
குறித்த கப்பலில் சட்டவிரோத பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இந்த கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, நடாத்தப்பட்ட சோதனைகளின் பிரகாரம், கப்பலிலுள்ள கொள்கலனொன்றிலிருந்து குறித்த 359 காட்டு யானைகளின் தந்தங்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
1528.9 கிலோகிராம் எடையுடைய 368 மில்லியன் ரூபா பெறுமதியான யானை தந்தங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்டதாக லெஸ்லி காமினி தெரிவித்தார்.
ஆபிரிக்கா நாடொன்றிலுள்ள காட்டு யானைகளே கொல்லப்பட்டு தந்தங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.