கால்நடை மருத்துவர்கள் இன்று (9) காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 48 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் விலங்கு உற்பத்தி, சுகாதார துறையில் அரசியல் திருத்தம், சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று சந்தைகளில் இறைச்சிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் இறைச்சிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை இடம்பெறாது என அரச கால்நடை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு நகரில் விநியோகிக்கப்படும் இறைச்சி வகைகளானது காலை வேளைகளில் கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்பே சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் இந்த வேலைநிறுத்ததால் இறைச்சி பரிசோதனைகள் இடம்பெறாது என்றும் இப்பரிசோதனை செய்யாமல் இறைச்சிகளை சந்தைகளுக்கு விநியோகிக்க முடியாதென்றும் சங்கத்தின் தலைவர் கீர்த்தி குமார தெரிவித்துள்ளார்.
மேலும் இறைச்சி பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், எதிர்வரும் 3 நாட்களுக்கு கொழும்பு நகரில் இறைச்சி விற்பனையில் தடை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.