Breaking
Tue. Jan 14th, 2025

சொந்தமண் இழப்பு…

சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் துரத்தப்பட்டோம். அதனால் சுகம் இழந்தோம். சுதந்திரம் இழந்தோம், வீடுவாசல், விளைச்சல் நிலங்களை இழந்தோம். தொழிலையும் தொழில் சார்ந்த உபகரணங்களையும் இழந்தோம். நமது உயிராக அமைந்திருந்த கல்வியையும் இழந்தோம். அகதிகளானோம், பஞ்சைகளாய், பாதசாரிகளாய் பொடிநடையில் புத்தளம் வந்தோம். அங்கே எமக்கு ஆறுதல் கிடைத்தது. அத்தனை குடும்பங்களுக்கும் வாழ்விடம் போதாது. மரநிழலில், மக்கள் இல்லாத வீடுகள், மண்டபங்கள் நமக்கான குடிமனையாகின. கால்நூற்றாண்டு காலம் நாதியற்ற வாழ்வு. துன்பங்களும் துயரங்களும் தொடர்கதையாகின.

அகதி நிலை…

1994 இல் ஆட்சி மாறியது. மர்ஹூம் அஷ்ரப் அமைச்சரானார். அன்போடும் ஆதரவோடும் மனிதாபிமானப் பண்போடும் அந்தப் பெருமகன் நமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வந்தார். அவருக்கு நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடனாக, அவரது கட்சிக்கு வாக்களித்து பாராளுமன்ற பிரதிநிதிகளையும் அனுப்பினோம். ஆனால், அஷ்ரபின் மறைவின் பின்னர், எமது தேவைகள் கவனிக்கப்படவில்லை. எமது அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை. எமது துன்பங்களுக்கு தீர்வு கிட்டவில்லை.

ரிஷாட்டின் விழிப்பு…

இந்த நிலையிலேதான் அகதிகளின் பிரதிநிதியாக நாம் அனுப்பிய இளைஞர் ரிஷாட் சிந்திக்கத் தொடங்கினார். “அகதி மக்கள்” அல்லாஹ்வால் தமக்குக் கிடைத்த அமானித ஜீவன்கள் என உணர்ந்தார். தனது மக்களுக்காக தன் ஆற்றலை, அறிவை பயன்படுத்த வேண்டும் என்ற விவேகமும், வீச்சும் அவரை புதிய கட்சியை அமைக்கச் செய்தது. பல்வேறு கட்சிகளில் இருந்த புத்திஜீவிகள் பலர் அவருடன் இணைந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” எனும் புதிய கட்சி பாரிய வளர்ச்சி பெற்றது.

ரிஷாட் அவர்களை தலைவராகக் கொண்ட இக்கட்சி, வளர்ச்சி பெறுவதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்று ரிஷாட் அவர்களின் குணப்பண்புகள்தான். அவர் படித்தவர்களை, ஆசிரியர்களை, மூத்தோரை மதிப்பவர். பிறர் கருத்துக்கு மதிப்பளிப்பவர். வடபுல மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவேண்டுமென்ற ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பணி செய்தவர். இன்னும் பணி செய்துவருபவர்.

ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதனை சரியாகச் செய்யும் வல்லமை அவரிடம் இருப்பதனாலேயே, ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் சுறுசுறுப்பான அமைச்சுக்களை அவரிடம் ஒப்படைக்கின்றன. மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண அமைச்சராக அவர் இருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்வியல் தேவைகளை உணர்ந்து, மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் சேவை புரிந்திருக்கின்றார். இயற்கையும், செயற்கையுமான இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேரை யாருமே குறைகாணாதவாறு மீள்குடியேற்றம் செய்த பெருமகன் அவர். அமைச்சராக இருந்த காலத்திலும், பெருமையின்றி, ஏழையின் தோழனாக, இன்னலுற்றவர்களுக்கு உபகாரியாக வாழ்ந்தவர்.

ரிஷாட்டின் அரும்பெரும் பணிகள்…

புத்தளம் மண்ணில் வாழும் வடபுல மக்களின் வாழ்வை சிறப்பாக்கி சீர்செய்ய அவர் ஆற்றிய பணிகள் காத்திரமானவை. சரித்திரத்தில் இடம்பெற வேண்டியவை. வீடுகட்டக் காணி, வீடமைக்க நிதி, கிராமங்களுக்கான பாதை அமைப்பு, வடிகான்கள் அமைப்பு, பாடசாலைக் கட்டிடங்கள், மதரஸா கட்டிடங்கள், பள்ளியமைக்க பணம், முன்பள்ளிகள் அமைப்பு, கல்வி வசதியற்ற கிராமங்களுக்கு புதிய பாடசாலைகள், முன்பள்ளி ஆசிரிய நியமனங்கள், அவர்களுக்கான வேதனம், படித்த இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் அத்தனையும் மேற்கொண்டவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் அவர்களே.

ஆசிரிய நியமனம் பெற முடியாதோருக்கு முகாம் அதிகாரி நியமனங்கள் அளித்து, எண்ணிலடங்காத பணிகளை செய்தவர். புத்தளத்திலும் வன்னியிலும் புதிய குடியேற்ற கிராமங்களை சுற்றிவரும்போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் கட்டிய கட்டிடங்களே வானோங்கி நின்று, அவரது பணியின் சின்னங்களாக மிளிர்கின்றன. சொந்த பந்தமென்ற பேதமின்றி, கிராமியவாதம், பிரதேசவாதம் இல்லாது அனைத்து மக்களுக்கும் அவரது சேவை வியாபித்துள்ளது. எனவேதான், இந்து, கிறிஸ்தவ மக்கள் கூட பெருமளவில் ரிஷாட் அவர்களுக்கு வாக்களித்தனர்.

போர் முடிவுற்றதும் எமது மக்கள் சொந்த மண்ணில் குடியேற முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஆற்றிய பணிகள் காலத்தால் அழியாதவை. சுமார் 25 ஆண்டுகளாகக் காடாகிப்போன கிராமங்களில் காடழிக்கவும், கண்ணிவெடியகற்றவும், உட்கட்டமைப்பு வசதிகளை செய்யவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் மும்முரமாக ஈடுபட்டார். இன்றும் ஈடுபட்டு வருகின்றார். நாடு சுதந்திரமடைந்த பின், வன்னியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவரிற்குள்ளும், ரிஷாட்டின் சேவைக்கு நிகராக யாருமே செய்யவில்லை என்பது வெள்ளிடைமலை.

தனிமனிதனாக இனவாதிகளையும் கடும்போக்காளர்களையும் எதிர்த்து போராடும் அமைச்சர் ரிஷாட், சமூகத்துக்கு ஆபத்துக்கள் ஏற்பட்டபோதெல்லாம் வாய்மூடி மௌனம் காத்தவரல்ல. ஆபத்து நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் நின்று கை கொடுத்தவர். மீள்குடியேறிய முசலி பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை துடைத்தெறிய அயராது பாடுபட்டதோடு, இன்றும் நீதிமன்றங்களில் வில்பத்து வழக்கு, பாதை வழக்கு என்பவைகளுக்காக நீதிமன்றப்படிகளில் ஏறி இறங்குகின்றார்.

சிங்கள சமூகத்தின் மத்தியிலே முன்னாள் அமைச்சர் ரிஷாட்டை பற்றி பிழையான எண்ணக்கருக்களை கடும்போக்குவாதிகள் கொண்டுசென்று, தமது இலக்கை அடைய முயற்சித்த போதும், சத்தியம் ஒருபோதுமே அழியப்போவதில்லை.

யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சேவை “மக்கள் நலன்காக்கும் நற்சேவை”. அல்லாஹ்வுக்கு பொருத்தமான சேவை. எனவே சூழ்ச்சிகளாலும், குழிபறிப்பாலும் ரிஷாட் எனும் பெருமகனை வீழ்த்த நினைப்பது பகற்கனவாகும்.

அல்லாஹ் அவருடன் இருக்கின்றான். மக்களின் இதயத்தில் அவரும் இருக்கின்றார். எனவே, எதிர்வரும் தேர்தலிலே அவரும், அவரது கட்சியான மக்கள் காங்கிரஸும் பாரிய வெற்றிபெற அல்லாஹ் துணைபுரிவான்! நாமும் நன்றிக்கடனாக நமது பொன்னான வாக்கை ரிஷாட்டுக்கும் அவர் சார்ந்த அணியினருக்கும் அளிப்போம்!!!

இத்ரீஸ் நிசார் –

Related Post