பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறி தலைமுறை தலைமுறையாக பேரோடும் புகழோடும் வாழ்ந்து வந்தார்கள். முன்னொருகால் கோட்டை பிரதேசத்திலும் நல்லூர் பகுதியிலும் குடியிருந்ததும் அங்கிருந்து பலவந்தம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றதும், இறுதியாக சோனக தெரு எனப்படும் பிரதேசத்தில் பல நூற்றாண்டு காலமாக நிலைகொண்டு வாழ்ந்து வந்ததும் வரலாறு.
வடக்கே ஓட்டுமடம், தெற்கே கொட்டடி, கிழக்கே வண்ணார்பண்ணை, மேற்கே நாவாந்துறை என்னும் பகுதிகளால் சூழப்பட்டு யாழ்.மாநகர சபையின் 19ஆம், 21ஆம் வட்டாரங்களை முழுமையாகவும், 20ஆம் வட்டாரத்தை பகுதியாகவும் உள்ளடக்கிய பிரதேசமே சோனகத்தெரு. தமிழ் சகோதரர்களால் சூழப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் 14க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 6 பாடசாலைகளும் அமைந்திருந்தன. தமிழ் மக்களோடு அன்போடும், ஆதரவோடும் சுமூகநிலையில் வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்தை நோக்கி அந்த கறுப்புஅக்டோபர் எனப்படும் அக்டோபர் 30 குறி வைத்து அழியா வடு ஒன்றை ஏற்படுத்தியது.
1990ஆம் ஆண்டு அக்டோபர் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக நல்ல நாளாகவே உதயமாகியது. ஆனால் யாழ். வாழ் முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் வாழும் பகுதி புலி இயக்கத்தினரால் அதிகாலையே முற்றுகையிடப்பட்டது.
ஆண்கள் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ‘ஈழ மண்ணை| விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்து முஸ்லிம் பகுதியிலிருந்து போக்குவரத்து செய்யும் வீதிகளனைத்தும் மூடப்பட்டு ஐந்து சந்தி பாதையால் மட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். வெளியேறும் போது பணம் தங்க நகை யாவும் சோதனையிடப்பட்டு அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு சகல சொத்துக்களையும் இழந்து வெறும் கையுடன் சங்குப்பிட்டி கேரதீவு வழியாக விரட்டப்பட்டனர், வெளியேற்றப்பட்டனர்.
கொடுமைமிகு இச்சம்பவம் நிகழ்ந்து 24 வருடங்களாகி விட்டன. வெளியேற்றப்பட்ட யாழ். முஸ்லிம்கள் தென் பகுதிகளில் அகதிகளாக முகாம்களிலும் நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். வீடில்லை, தொழில் இல்லை எனவே உடை இல்லை, உணவு இல்லை என அல்லற்பட்டனர். உறவுகள் பிரிக்கப்பட்டன. ஒருவர் புத்தளத்தில் அவரது சகோதரர் பேருவளையில் என குடும்பங்கள் சிதறுண்டன.
இன்றுடன், 24 ஆண்டுகள் ஓடிவிட்டன. முடியவில்லை, மறக்க முடியவில்லை என்று எமது தாயகத்திற்கு சென்று வாழ்வோம் என யாழ் முஸ்லிம்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
2001 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின் யாழ். முஸ்லிம்கள் மிகச் சிலர் மீண்டும் தமது சொந்த இடத்திற்குச் சென்று வியாபார முயற்சிகளில் ஈடுபட்டனர். சில பள்ளிவாசல்
களை புனரமைத்து அப்பகுதியில் தற்காலிகமாக குடியமர்ந்தனர். ஒஸ்மானியா கல்லூரியும் மீளத்திறக்கப்பட்டது. மாநகரசபை தேர்தல் மூலமாக இடம்பெயர்ந்தோரது வாக்களிப்புடன் 5 அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்பு சில நூறுபேர் குடும்பங்களாகச் சென்று வாழ்கின்றனர். ஒஸ்மானியக் கல்லூரியிலும் மாணவர் தொகை சில நூறு என அதிகரித்துள்ளது.
வெளியேற்றப்பட்ட போது குடும்பங்கள் 2700 என அமைந்திருந்தது. இன்று 8000 என பெருகியுள்ளது. ஆனால் 500 குடும்பங்கள் கூட இதுவரை நிரந்தரமாக மீளக் குடியேறவில்லை.
தற்போது வடமாகாண சபை இயங்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியமைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை யாழ் முஸ்லிம் ஒருவருக்கு அளித்துள்ளனர். அத்துடன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்நாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தமது சபை ஆரம்ப உரையிலும் வேறு சந்தர்ப்பங்களிலும் யாழ்ப்பாண முஸ் லிம்கள் மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியேற உரிய வசதிகள் செய்யப்படும். அவர்களும் யாழ். மண்ணிற்கு உரியவர்களே எனக் கூறி யுள்ளார்கள்.
கசப்பான அக்டோபர் 30ஐ எம்மால் மறக்க முடியாது. அதனை இனிப்பாக்குவதே இன்றைய தேவையாகும். சில தினங்களுக்கு முன் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன மகாநாட்டில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா வட மாகாண சபைக்குரிய அதிகாரங்களை வழங்கினால் முஸ்லிம்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீளக் குடியேற்றுவோம் என அளித்துள்ள வாக்குறுதி நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளது. இந்தப் பின்னணியில் மத்திய அரசும் மாகாண அரசும் ஒன்றிணைந்து எமது மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேற்ற ஆவன செய்ய வேண்டும்.
எம்மை வெளியேற்றி கால் நூற்றாண்டை அடைந்துள்ள இவ்வேளை யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களது வினயமான வேண்டுகோள் இதுவாகும்.
எம்.ஏ.எம். ஸப்றின்,
செயலாளர், ஜே.எம்.ஆர்.ஓ. (JMRO)