வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என அமைச்சர் W.D.J.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் குறித்த அதிகாரிகளுடன் அமைச்சர் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தன்னால் இயன்றதை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், எனினும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் மிகவும் நிதானமாக குறித்த விடயங்களுக்கு தீர்வைப் பெற வேண்டும்’ எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களது பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அதன் அறிக்கையினை அமைச்சரவையில் சமர்பிப்பதற்கு கால அவகாசம் தேவை. குறைந்தது 3 மாதங்களாவது தேவை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் இவர்கள் மிகவும்
அவசரப்படுவதால் குறித்த 3 மாதங்களுக்கு முன்பாகவே பிரச்சினைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க திணைக்களத்தின் மறுசீரமைப்பு அல்லது சேவைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் மாற்றங்களை ஆய்வு செய்யாமல் அவசரமாக செய்ய இயலாது என்றும் அமைச்சர் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொழிற்சங்க திணைக்கள அதிகாரிகள் தம் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு அமைய தான் அவர்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.