பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட, எல் நினோ தாக்கத்தினால், பெரும்பாலான ஆசிய நாடுகளில் கடும் வெப்பம், மற்றும் வரட்சி நிலவியது.
இந்த ஆண்டு இறுதியில் லா – நினா பிடியில் சிக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு தொடங்கிய எல்-நினோ கால நிலை மாற்றத்தினால் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் காணப்பட்டது.
உலகில் மிக அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்த நிலையில், எல் நினோவின் தாக்கம், இந்த ஆண்டு நடுப்பகுதியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து லா -நினா என்ற குளிர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எச்சரித்துள்ளனர்.
லா- நினா காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்றும், இதனால், ஏற்கனவே வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய உற்பத்தி, மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. உதவிச் செயலர் ஸ்டீபன் ஓபிரையன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் லா-நினா, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
எல்-நினோவினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும் எனவும் எல்-நினோவினால் ஏற்கெனவே உலகம் முழுவதும் 6 கோடிமக்கள் அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், லா-நினாவால் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
லா- நினா காலநிலை மாற்றத்தினால், கடந்த 2011ம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கை, இந்தியாவில் கடும் குளிரான கால நிலை காணப்பட்டதுடன், அதனால் பலர் இறக்கவும் நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.