Breaking
Sat. Nov 23rd, 2024

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் கடந்த வாரம், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் தூதர்கள் மாநாடு ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி தொடர்பாக மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது. ஜம்மு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்கான கேள்வியே எழவில்லை என்றார்.

இந்தியா-பாகிஸ்தான் உறவில் தற்போது நிகழும் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக இந்தியா தெளிவுபடுத்திவிட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நபீஸ் சகாரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் நேற்று இந்திய தூதரை அழைத்து இந்திய வெளியுறவு செயலாளருக்கு ஒரு கடிதத்தை வழங்கினார். அதில், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உள்ள பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் சர்வதேச கடமை என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

By

Related Post