Breaking
Sat. Nov 16th, 2024
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலம் அமைத்தலின் போது, பயணிகளுக்கென பாதுகாப்பான மாற்றுப் போக்குவரத்து ஒன்று அமைக்கப்படாமையின் காரணமாகவே பேரனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இழுவை படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் இன்று (23) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
 
“ஒரு இலட்சம் மக்கள் வாழ்கின்ற கிண்ணியா பிரதேசத்திலே, இன்று காலை துக்ககரமான அனர்த்தம் ஒன்று ஏற்பட்டு, இதுவரை 07 பேர் மரணமடைந்ததாக நாம் அறிகின்றோம். அதில் ஒரே வீட்டிலே எட்டு வயது, ஆறு வயதை நிரம்பிய இரண்டு மாணவர்கள் உட்பட நான்கு மாணவர்களும், ஏனைய மூன்று நபர்களும் உயிரிழந்துள்ளார்கள்.
 
வீதி அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது இந்த சபையிலே இருக்கின்றார். கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலம் அமைக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எனினும். ஒரு இலட்சம் மக்கள் வாழும் இந்தக் கிண்ணியா பிரதேசத்தில் ஒரு பாலத்தை நிர்மாணிப்பதாக இருந்தால், அந்தப் பக்கம் உள்ள 27 ஆயிரம் குடும்பங்களையும், இந்தப் பக்கத்தில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்களையும் இணைக்கும் அந்தப் பிரதேசத்தில், 11 பாடசாலைகளும் இருக்கின்றன என்பதை கவனத்திற் கொண்டும், ஒரு நாளைக்கு எட்டாயிரம் பேர் அதனூடாக பயணிகின்றனர் என்பதை கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் பயணிகளின் நலன்களை முன்னிறுத்தியும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
 
அந்தப் போக்குவரத்துக்கு மாற்றீடாக இன்னுமொரு தற்காலிக பாதையை அமைக்கும் வகையில், சாத்தியக் கூற்று அறிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே, அதன் பணிகளை தொடங்கியிருக்க வேண்டும்.
 
அண்மையிலே, கொழும்பிலே பாரிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக மாதிரி வரைபடம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை நான் கண்ணுற்றேன். எனவே, கிண்ணியா குறிஞ்சாக்கேணி போக்குவரத்திலும் ஒரு தற்காலிக மாற்று ஏற்பாடொன்றை மேற்கொண்டிருந்தால், இந்த அனர்த்தத்தை தவிர்த்திருக்க முடியும். எனவே, வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது அதிகாரிகள் இதற்கு யார் பொறுப்பு? என கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேலும், கிண்ணியா பெற்றோர்கள், தமது பிள்ளைகளை இழந்து மிகவும் வேதனையில் தவிக்கின்றனர். எனவே, இந்த சம்பவத்தின் பொறுப்புதாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதோடு மாத்திரமின்றி, அவசரஅவசரமாக பாதுகாப்பான மாற்றீட்டு போக்குவரத்து ஒழுங்கொன்றையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், இந்தப் பாலத்தை அமைப்பதற்கு உடனடி நிதி ஒதுக்கீட்டினை செய்து, அவசரமாக இதன் பணிகளை நிறைவுக்கு கொண்டுவர வேண்டும்.” என்று கூறினார்.

Related Post