Breaking
Mon. Dec 23rd, 2024

சுஐப் எம் காசிம்

கிண்ணியாவில் தீவிரமாக பரவிவரும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அமைச்சர் றிஷாட் விடுத்த வேண்டுகோளையடுத்து கொழும்பிலிருந்து அவசரமாக விசேட 3 வைத்தியர்களை அனுப்புவதற்கும் டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளுக்கு மத்தியரசிடமிருந்தும் உதவிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு லண்டன் சென்றிருந்த அமைச்சர் றிஷாட் இன்று காலை (2017.03.14) நாடு திரும்பியிருந்தார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பின்னர் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து கிண்ணியா நிலவரம் தொடர்பான எழுத்து மூலக்கடிதமொன்றையும் கையளித்தார். அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கல்முனை பிராந்திய சுகாதார பணியகத்திலிருந்து அவசரமாக டெங்கு ஒழிப்புக்குத் தேவையான ஆளணியைப் பெற்றுக்கொள்வதற்காக மத்திய அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அமைச்சர் றிஷாட் கவனம் செலுத்தினார்.

இதே வேளை திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப் கிழக்கு மாகாண ஆளுநரிடமும் திருமலை மாவட்ட அரசாங்க அதிபரிடமும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இரண்டு கோடி ரூபா நிதி அவசரத்தேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மஹ்ருப் எம்.பி தெரிவித்தார்.

நேற்றுக் காலை(2017.03.13) கிண்ணியா பிரதேசத்துக்கு விஜயம் செய்த டெங்கு ஒழிப்பு பிரதிப் பணிப்பாளர் திசேரா நிலைமைகளை நேரில் ஆராய்ந்த பின்னர் ஆளுநருடன் இணைந்து  அவர் தயாரித்த அறிக்கை மத்திய அரசாங்கத்திடம் இன்று கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமடைந்து வரும் அதே வேளை வெளிமாவட்டங்களில் இருந்தும் உள்ளுரிலிருந்தும் தொண்டர்கள் அங்கு வந்து டெங்கு ஒழிப்புப் பணியில் மும்முரமாக ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்கள் மருத்துவ ஆய்வுகூட உதவியாளர்கள் தொழிநுட்ப உதவியாளர்கள் எனப்பல்வேறுதரப்பட்ட மருத்துவவியலாளர்கள் இரவு பகலாக எந்தவிதமான எதிர்பார்ப்புக்களுமின்றி இந்தப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிண்ணியா மக்கள் தமது ஒத்துழைப்புக்களை இந்தப் பணியாளர்களுக்கு நல்கி வருவதாக மஹ்ருப் எம்.பி தெரிவித்தார்.

 

பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் மெத்தைகள், நுளம்பு வலைகள் மற்றும் மருத்து வசதிகளுக்கு உதவி வருவதாக தெரிவித்த மஹ்ருப் எம்.பி, கிண்ணியா மக்கள் படும் துன்பங்களுக்கு மனமுவந்து உதவியளிக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.

இதே வேளை திருமலைக் கச்சேரியில் பொலிசாரும் முப்படையினரும்; இணைந்து இன்று (2017.03.14) நடாத்திய அவசர மாநாட்டில் நாளை தொடக்கம் கிண்ணியா டெங்கு ஒழிப்புப் பணிகளில் படையினரும் ஈடுபடுவதென முடிவெடுக்கப்பட்டதாக அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Post