Breaking
Thu. Jan 9th, 2025

கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்பு மற்றும் ஜெய்கா (JICA) திட்டத்தினூடாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள்  மற்றும் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

அதனையடுத்து, கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்புக்காக, வைத்தியசாலையினைச் சூழவுள்ள காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பங்குபற்றுதலுடன் கிண்ணியா பிரதேச செயலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், வைத்தியசாலையினைச் சூழவுள்ள காணிகளின் உரிமையாளர்களும் பங்கேற்றிருந்தனர். காணி உரிமையாளர்களுக்கான நஷ்டயீட்டினை வழங்குவது சம்பந்தமாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி ஆகியோர்  கிண்ணியா தள வைத்தியசாலை தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை அண்மையில் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னரே, கிண்ணியா வைத்தியசாலையில்  பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்பொழுது  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post