Breaking
Mon. Dec 23rd, 2024

கிரீஸ் நாட்டில் நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஐரோப்பிய நாடுகளின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என 61.31 சதவீதம் பேர் வாக்களித்தனர். சிக்கன திட்டத்துக்கு ஆதரவாக 38.69 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.

சிக்கன நடவடிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஆதரவாளர்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் கிரீஸ் நாட்டின் பண நெருக்கடி தீரவில்லை. ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக மெஜாரிட்டியான மக்கள் வாக்களித்ததால் அதில் இருந்து கிரீஸ் விலகும். ‘யூரோ’ நாணயம் பயன்படுத்த முடியாது என யூகங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆனால், கிரீஸ் நாட்டுக்கு பெருமளவில் கடன் வழங்கியுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேயும் டெலிபோனில் பேசினர். அப்போது கிரீஸ் மக்களின் வாக்கெடுப்பை மதிக்க வேண்டும் என ஒப்புக் கொண்டனர்.

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய யூரோவை பொது நாணயமாக பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டை இன்று மாலை கூட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த மாநாடு இன்று கூடுகிறது. அதில் கிரீஸ் மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு கூடுதலாக நிதி உதவி அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே ஐரோப்பிய மத்திய வங்கி கிரீஸ்நாடு தன்னிடம் வாங்கிய 350 கோடி யூரோ கடன் தொகையை வருகிற 20–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கெடு விதித்துள்ளது. அதன்படி கடன் தொகையை கிரீஸ் செலுத்தா விட்டால் அவசர கால கடன் உதவியை ஐரோப்பிய மத்திய வங்கி முற்றிலும் நிறுத்திவிடும்.

கடன் சுமை காரணமாக கிரீஸ் வங்கிகள் பணமின்றி மிகவும் சிரமப்படுகின்றன. இந்த நேரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி அவசர கால கடன் வழங்குவதை நிறுத்தி விட்டால் கிரீஸ் வங்கிகள் அனைத்தும் முற்றிலும் தனது செயல்பாட்டை இழக்க நேரிடும்.

எனவே, இன்று ஐரோப்பிய நாடுகளின் உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவே கிரீஸ் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post