Breaking
Mon. Dec 23rd, 2024

கிரேன் (பாரம்தூக்கி) ஒன்றில் இணைக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பாரிய விமானமொன்று தரையிலிருந்த மதில் ஒன்றின் மீது வீழ்ந்த சம்பவம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானத்தை ஹைதராபாத் நகரிலுள்ள பழைய பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து, எயார் இந்தியா நிறுவனத்தின் பயிற்சி நிலையமொன்றுக்கு தரை வழியாக கொண்டுசெல்லத் தீர்மானிக்கப்பட்டது.

எயார்பஸ் ஏ 320 ரகத்தைச் சேர்ந்த சுமார் 70 தொன் எடையுள்ள இந்த விமானமானது கிரேன் ஒன்றில் இணைத்து 16 சக்கரங்கள் கொண்ட வாகனமொன்றின் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டது.

அவ் வாகனம் செல்வதற்காக விமான நிலையத்தின் மதிலொன்றின் ஒரு பகுதியும் உடைக்கப்பட்டது. எனினும், இவ் வாகனம் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் பாரம் தாங்காமல் 200 தொன் எடையுள்ள அந்த கிரேன் சரிந்தது.

இதனால், கிரேனுடன் இணைக்கப்பட்டிருந்த விமானம் 60 அடி உயரத்திலிருந்து திடீரென கீழே வீழ்ந்து மதிலொன்றில் மோதியது.

நேற்று முன்தினம் காலை 7.15 மணியளவில் பாடசாலை ஒன்றுக்கு அருகிலுள்ள கிளப் ஒன்றின் மதில் மீது இவ் விமானம் வீழ்ந்தது. விமானம் வீழ்ந்ததைக் கண்டவுடன் அருகில் இருந்தவர்கள் பதறியோடினர்.

எனினும், இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. ஆனால், விமானம் சேதமடைந்துள்ளது.

விமான நிலையத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பயிற்சி நிலையத்துக்கு இவ் விமானம் கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேகம்பேட் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் புதிய விமான நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் மேற்படி விமானம் 2007 ஆம் ஆண்டிலிருந்து பேகம்பேட் விமான நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்தது.

இவ் விபத்து இடம்பெற்றபோதிலும் விமானிகள், விமானப் பணிப்பெண்கள், பொறியியலாளர்களுக்கான பயிற்சிகளுக்காக இவ் விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post