அட்டாளைச்சேனை, கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி மாணவர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாடிக் கட்டிடத்தில் பாதுகாப்பு முறைமையினை மேற்கொள்ளுமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் நேற்று கல்லூரி நிருவாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இக்கல்லூரியின் 03ஆம் வருட மாணவனாகிய ஜே.றவூஸ்டீன் வயது (16) கடந்த பெப்பரவரி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை 03ஆவது மாடியிலிருந்து விழுந்து மரணமடைந்தார்.
இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையையடுத்து இக்கல்லூரியின் மாடிக்கட்டிடத்தின் வெளிப்பகுதி அங்கிருந்த மாணவர்களின் பாதுகாப்புக்கு உகந்தவையாக அமையாதிருந்தமை பற்றி நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற நீதிவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது கல்லூரியின் அதிபர் எம்.எல்.அப்துல் லத்தீப் மௌலவி மற்றும் கல்லூரி நிருவாகத்தின் செயலாளர் யூ.எல். நியாஸி மௌலவி உள்ளிட்ட குழுவினரும் குறித்த இடத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
குறித்த கல்லூரியின் 03 மாடிகளையும் மற்றும் விடுதிகளையும் அதன் உள், வெளிப்புற சுற்றுச் சூழலையும் நீதிபதி பார்வையிட்ட போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டிடத்தின் பாதுகாப்பு முறைமையை ஏற்படுத்துமாறு நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.
மேலும் 130 மாணவர்கள் பயின்று வரும் இக்கல்லூரியின் சூழலை சுத்தம் செய்து வெளிப்புறச் சூழலையும் அழகு படுத்துமாறும் நீதிவான் ஆலோசனை வழங்கினார்.
குறித்த விடயங்களை மூன்று மாத காலத்தினுள் நிறைவேற்றுவதாக கல்லூரி நிருவாகத்தினர் இதன் போது நீதிவானிடம் உறுதியளித்தனர்.
-Vidivelli-