Breaking
Mon. Nov 18th, 2024

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் எமக்குக் கிடைக்கும் வெற்றிதான் வடக்கில் மண்ணுக்காக போராடும் முஸ்லிம் மக்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைவதுடன் தென்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை விடயங்களும் வெற்றிபெறும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தலைவரும்  அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு  அண்மையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் எங்களது கருத்துகளை அரசியல் தலைமைகளிடம் முன்வைத்துள்ளோம்.

அதேபோன்று உரிய அமைச்சர்களிடம் கலந்துரையாடினோம். இது தொடர்பில் ஜே.வி.பி.யினருடன் கலந்துரையாடவுள்ளோம். அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

நாங்கள் அரசாங்கத்தில் இருக்கின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்கின்ற நியாயமான காரணத்தை நீதிமன்றில் முன்வைக்கவுள்ளோம்.

இதன் காரணமாக திருகோணமலை உட்பட பல மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு ஆபத்துகள் உள்ளன. இந்த ஆபத்துகளை தடுப்பதற்கு நாங்கள் நாடளாவிய ரீதியில் ஆய்வுசெய்து அறிக்கைகளை சமர்ப்பித்தோம்.

அவற்றில் ஒரு சில உள்வாங்கப்பட்டு பெரும்பான்மையான விடயங்கள் சேர்க்கப்படாமல் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்படவேண்டும், விரைவாக நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம்.

இந்த நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு பல்வேறு தடவைகள் கோரிக்கைகள் விடுத்தன.

 

ஆனால் ஒரேயொரு முஸ்லிம் கட்சியுடன் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகள் இருந்து வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகளின்போது உடன்பாடுகள் ஏற்பட்டது போன்று வெளிப்படுத்தப்படுவதையும் நாங்கள் அவதானித்துள்ளோம்.

 

வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா பிரிந்திருக்க வேண்டுமா என்கின்ற வினா எழும்போது அதன் சாதக பாதக தன்மை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை பேசவில்லையென்பது இன்று யதார்த்தமாகவுள்ளது.

கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவுள்ளார். வடக்கில் ஒரு தமிழர் முதலமைச்சராகவுள்ளார்.

வடக்கு தமிழ் தலைமையினால் வட – கிழக்கு இணைக்கப்படவேண்டும், சமஸ்டிவேண்டும் போன்ற தேவையான விடயங்கள் அடங்கிய பல்வேறு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லும் தன்மையினை நாங்கள் காணலாம்.

 

கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைந்தாலும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் அடையாளம் வடக்கும் கிழக்கும் இணைவதனால் இல்லாமல் போகும் நியாயமான அச்சம் எமக்குண்டு.

 

நாங்கள் உருவாக்கிய கட்சி, எமக்காக உருவாக்கிய கட்சி இன்று முஸ்லிம் சமூகத்திற்கு சவாலாக உருவாகியுள்ளதா என்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டில் எங்குமில்லாதவாறு மட்டக்களப்பில் அமீர்அலியினால் நிலத்தொடர்பற்ற கல்வி வலயம் உருவாக்கப்பட்டது.

இன்று முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும் வலம் வருபவர்கள் ஒரு வலய கல்வி பணிமனையை பெற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் அதற்கான பதிலை நீங்களே கூறவேண்டும்.

 

அம்பாறை மாவட்டத்தின் மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள்தான் உள்ளோம். வேறு யாரும் இல்லையென்று பேசும் தலைமை,அந்த மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன என்பது கேள்வியாகவே உள்ளது.

 

கல்வியில் பிரச்சினை காரணமாக தமது மண்ணுக்காக இந்த நாட்டில் சயனைட் வில்லைகளை அணிந்துகொண்டு ஆயுதம் தூக்கி இளைஞர்கள் போராடிய வரலாறு இந்த நாட்டில் உள்ளது.

தனிநாட்டுக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் இன்று ஜனநாயக ரீதியாக தமது கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர்.

கடந்த காலத்தில் நீதியரசராக இருந்தவர் வடமாகாண முதலமைச்சராக இருந்துகொண்டு தமது இனத்திற்காக சில விடயங்களை பேசமுடியாத நிலையிலும் தன்னைப் பற்றி யார் விமர்சித்தாலும் பரவாயில்லையென்று தனது நோக்கத்திற்காக செயற்படுகின்றார்.

அவர் தனது சமூகத்திற்காகவும் தான் அமர்ந்துள்ள ஆசனத்தின் நோக்கத்தினை அடையவேண்டும் என்பதற்காகவும் தன்னை இழந்து பேசிவருவதையும் பல்வேறு போராட்டங்களை நடாத்திவருவதையும் அனைவரும் அறிவார்கள்.

எங்களுக்கு என்று ஒரு கட்சி, எங்களுக்கென்று தனித்துவமான இயக்கம் அந்த இயக்கத்தின் தாயகமாகவுள்ள அம்பாறை மாவட்டத்திலே உள்ள பிரச்சினைகளை பார்க்கும்போது வேதனையாகவுள்ளது.

இவர்கள் காதிருந்தும் கேட்காத செவிடர்களாகவும் அதிகாரங்கள் இருந்தும் பயன்படுத்தாத கையாலாகாதவர்களாகவும் இதுவரையில் இருந்து வருகின்றார்கள்.

மத்தியிலும் ஆட்சி அதிகாரம் உள்ளது. மாகாணத்திலும் ஆட்சி அதிகாரம் உள்ளது. ஆனால் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் அடையும் வெற்றிதான் வடக்கில் மண்ணுக்காக போராடும் முஸ்லிம் மக்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைவதுடன் தென்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை விடயங்களும் வெற்றிபெறும்.

அம்பாறை மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றது என்றால் இந்த நாட்டில் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமைகள் தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும்.

நாங்கள் அரசியல் நோக்கத்திற்காக அரசியல் இருப்பினை தக்கவைப்பதற்காக இந்த கட்சியை ஆரம்பிக்கவில்லை.

ஒரு கட்சிக்குள் இருந்த பயணிக்கவேண்டும் என்பதற்காக அதற்குள் இருந்து நியாயம் கேட்டதற்காக வெளியேற்றப்பட்டவர்களே நாங்கள் அதன் காரணமாகவே ஒரு கட்சியை அமைக்கவேண்டிய தேவைப்பாடு எங்களுக்கு ஏற்பட்டது.

 

கட்சியில் இருந்து வெளியேறியபோது எங்களது அரசியல் அஸ்தமனமாகிவிடும் என்று சிலர் கருதினர்.இன்று நாங்கள் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த ஆட்சியை ஏற்படுத்திய ஆறாவது தூணாக இருக்கின்றோம்.

ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே எங்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

தலைமைத்துவத்தினை பாதுகாப்பதற்கு கட்சி தேவையில்லை.சமூகத்தினை பாதுகாப்பதற்காகவே கட்சி தேவை.

கட்சியின் தலைமை தனது கடமையினை சரியாக செய்யவில்லையென்றால் தலைமையினை மாற்றுவதற்கான அதிகாரம் அந்த கட்சியிடம் இருக்க வேண்டும். அது தொடர்பான விடயங்களை எங்களது கட்சியின் யாப்பில் உள்ளடக்கியுள்ளோம்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது

இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மப்ரூப்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,கல்முனை மாநகர முதல்வர் உட்பட கட்சியின் முக்கிஸ்தர்கள், பிரதேச அமைப்பாளர்கள், கல்விமான்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Post