ஞாயிற்றுக்கிழமை கிழக்கு உக்ரைனின் சர்ச்சைக்குரிய டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களில் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கிளர்ச்சியாளர்களால் நடத்தப் பட்ட தேர்தலில் ரஷ்ய ஆதரவாளரும் அவர்களால் நியமிக்கப் பட்ட தற்போதைய பிரதமருமான அலெக்ஸாண்டர் ஜகார்சென்கோ வெற்றி பெற்றிருப்பதாகத் சுயமாகத் தன்னை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தியிருக்கும் பகுதியின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய ஆதரவாளர்களால் சுயமாக லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கும் பிரதேசத்தின் மத்திய தேர்தல் கமிசனின் தலைவர் தகவல் அளிக்கையில், தமது பகுதியிலுள்ள சுமார் 100 வாக்களிப்பு நிலையங்களில் 1/2 மில்லியன் மக்கள் வாக்களித்திருப்பதாகவும் இதில் ரஷ்யாவுக்கு உள்ளே 3 வாக்களிப்பு நிலையங்கள் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குகள் எண்ணப் பட்ட பின்னர் ஜகார்சென்கோ 765 350 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக டொனெட்ஸ்க் தேர்தல் கமிசன் தலைவர் தெரிவித்துள்ள போதும் இது எத்தனை சதவீதம் என்பது அறிவிக்கப் படவில்லை.
இதேவேளை இத்தேர்தலை சட்ட விரோதமானது எனவும் இதன் முடிவுகளை அங்கீகரிக்க மாட்டோம் எனவும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. வாக்கெடுப்பு நடத்தப் பட முன்னர் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அதனைப் போலியானது என்றும் தீவிரவாதிகளாலும் கொள்ளைக் காரர்களாலும் நடத்தப் படுவது என்றும் விமர்சித்திருந்தார். உக்ரைன் அதிகாரிகளோ ஞாயிற்றுக்கிழமை பிரிவினை வாதிகள் நடத்திய தேர்தல் மீது கிரிமினல் விசாரணை நடத்தப்படும் என்றும் இது ஓர் அதிகாரப் பறிப்பு நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளதுடன் தேர்தல் நடைபெற்று வெளியான முடிவுகள் சமாதானத்துக்கு அச்சுறுத்தல் என்றும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இத்தேர்தலையும் அதன் முடிவுகளையும் அங்கீகரிப்பதாக அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிழக்கு உக்ரைனில் உக்ரைன் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களுக்கு இலவசமாகவும், விலை குறைவாகவும் பழங்கள் மற்றும் மரக்கறிகள் அளிக்கப் பட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் உக்ரைன் மக்கள் பெருமளவில் வாக்களிப்பில் கலந்து கொண்டதற்கு அவர்களிடம் இருந்த யுத்த அச்சம் மற்றும் அமைதிக்கான தேடுதலும் நம்பிக்கையுமே காரணம் என அரசியல் அவதானிகள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.