Breaking
Wed. Nov 27th, 2024

கிழக்கு மாகாண இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு ஜூன்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகளை வழங்குவதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை மாலை (13) கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நெக்டா அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.தயாபரன், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.தௌபீக் மற்றும் இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, நாடு பூராகவும் இறால் குஞ்சுகள் ஆகஸ்ட் மாதமளவில் வழங்கப்படுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஆகஸ்ட் மாதமளவில் மழை காலம் ஆரம்பிப்பதால் இறால் வளர்ப்பு பண்ணையின் அணைக் கட்டுகள் உடையும் நிலை காணப்பட்டு வருகின்றது. இதனால் இறால் வளர்ப்பில் பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. இதனை தீர்க்கும் வகையில் இறால் வளர்ப்புக்கு இறால் குஞ்சுகளை முன்கூட்டியே வழங்குமாறு இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் பிரதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிற்பாடே பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாணத்திற்கு ஜூன் மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

-முர்ஷித் கல்குடா-

 

 

Related Post