கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சூழ்ச்சியிலிருந்து எமது நியமனத்தைப் பாதுகாத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைருக்கு புதிதாக கிழக்கு மாகாணத்தில் நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாண அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 இற்கான நியமனக் கடிதம் கடந்த 03.04.2014 ஆந் திகதியிடப்பட்டு கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளரினால் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நியமனங்கள் கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசார அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக்கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிமன்றம் சென்று இந்நியமனங்களுக்கு எதிராக தடையுத்தரவை பெற இருந்ததை அறிந்த கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் அவசர அவசரமாக செயற்பட்டு அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தபால் மூலம் நியமனக் கடிதங்களை பெற்றவர்கள் உடனடியாக கடமை ஏற்குமாறு ஊடகங்கள் மூலமாக அறிவித்தல் விடுத்திருந்தார். இதனால் பெரும்பாலான உத்தியோகத்தர்களின் நியமனங்கள் பாதுகாக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நீதிமன்றம் சென்றதன் விளைவாக கடந்த 04.04.2014 ஆம் திகதிக்குப் பின்னர் இந்நியமனங்களை வழங்க முடியாதென நீதிமன்றம் மூலம் தடை உத்தரவைப் பெற்றதனால் ஏனைய சகோதரர்களுக்கு இந்நியமனம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இப்பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் உட்பட சகல அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.