Breaking
Mon. Dec 23rd, 2024

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு இந்த நல்லாட்சிக் காலத்தில் குறுநில மன்னர்போல் அராஜக ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கெதிராக நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணை கொண்டு வரத் தயாராகிறோம் என கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(15) இடம்பெற்ற ஆற்றலுள்ள மாணவர்களைக் கௌரவிக்கும் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்துக்குத் தலைமை தாங்குகின்ற அரசியல்வாதி மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றார்.

இந்த மாகாணத்துக்கு இப்பொழுது ஒரு நோய் பீடித்திருக்கிறது. அதனால், இந்த மாகாணம் சீரழிந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி முதலமைச்சரின் முன்னால் ஒரு நிராயுதபாணி. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஒரு தலையாட்டி பொம்மை.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் சேர்ந்து தற்போதைய கிழக்கு மாகாணத் தலைமைக்கு புத்தி சொல்லி சீர் கெட்டுக் கிடக்கின்ற மாகாண நிருவாகத்தைச் சீர் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், இது பற்றி நாங்கள் நாடாளுமன்றத்திலும் நாடு முழுவதும் ஒலிக்கும் வண்ணம் பகிரங்கமாகப் பேசப் போகின்றோம். நாடாளுமன்றத்திலே நானுட்பட, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீல.மு.காவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அரசியல் அநாகரிகங்களை பிரேரணையாகக் கொண்டு வந்து முடிவு கட்டவிருக்கின்றோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

By

Related Post