கடந்த (20.05.2016) ஆம் திகதி திருகோணமலை சாம்பூரில் இடம்பெற்ற பாடசாலை விழாவொன்றில் முதலமைச்சர் நஸீர் அகமத்தை பற்றி ஊடகங்களில் பூதாகரமான செய்திகள் வெளியிடப்பட்டன.
பொதுக்கூட்டமொன்றில், அதுவும் பாடசாலை மாணவர்களும், அமெரிக்க தூதுவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது வார்த்தைப் பிரயோகங்களும் நடந்து கொண்ட முறையும் கண்டிக்கத்தக்கது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அத்தகைய நடத்தைக்கு அவர் உந்தப்பட்டாரா என்பதை அறிவது மிக முக்கிமாகும்.
13 ஆம் யாப்புத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள்; , அத்தோடு முதலமைச்சரின் அந்தஸ்து என்பன வட கிழக்கில் பேணப்படுகின்றதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. இந்த விரக்கதியின் வெடிப்பே இந்நிகழ்வுக்குக் காரணமாக இருக்கக் கூடும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண முதலமைச்சர் ஒருவருக்கு மாகாணத்துக்குள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் உரிமையும் கடப்பாடும் உள்ளன.
இன்றைய அரசியல் கலாச்சாரத்தில் நஸீர் அகமத்தின் நடத்தை ஏதும் புதிதான ஒன்றல்ல. முதலமைச்சர் முஸ்லீமாக இல்லாதிருந்தால் இந்த விடயம் விஸ்வருமெடுத்திருக்க முடியாது. . தேசிய சுதந்திர முன்னணியின தலைவர் விமல் வீரவன்ச பௌத்தாலோக மாவத்தையில் வைத்து ஐக்கிய நாடுகள் பிரதிநி ஒருவரை அவமானப்புடுத்தும் முறையில் திட்டிய போது ஏற்படாத எதிர்ப்பு – காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம போலீஸ் நிலையத்துக்கு பலத்காரமாகப் பிரவேசித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவரை பலவந்தமாக எடுத்துச் சென்ற போது ஏற்படாத எதிர்ப்பு – வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர யாழ்ப்பாணம் சென்ற போது இராணுவ அதிகாரியை அதட்டிய போது ஏற்படாத எதிர்ப்புக் கோஷங்கள் நஸீர் அகமத்துக்கு ஏற்பட்டது அவர் ஒரு முஸ்லீம் என்பதனாலா?
நாட்டின் முப்படை வீரர்களும் மதிக்கப்பட்டு கௌரவப்படுத்த வேண்டியவர்களே. எனினும் அரச அதிகாரம் பெற்ற மக்கள் பிரதிநிதியொருவருக்கு எதிராக சரீர அழுத்தம் கொடுக்கலாமா? அது நாட்டின் குற்றவியல் சட்ட முறைமைக்கு உட்பட்டதா?
நஸீர் அகமத்தின் நடத்தை வெறுக்கத்தக்கதாக இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் முதலமைச்சர் பங்கு பெறும் வைபவங்களுக்கு முப்படை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப் பட்டிருக்குமாயின் அதில் விசனத்துக்குரிய விடயம் என்னவென்றால் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் வைபவமொன்றுக்கு ஜனாதிபதியோ அல்லது பிரதம மந்திரியோ கலந்து கொள்ளும் போது அங்கு படை வீரர்கள் கடமைக்காக நிறுத்தப் பட்டிருக்கும் நிலையில் அந்த கூட்டத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வருகை தந்தால்; அந்தப் படைவீரர்கள் அங்கிருந்து விலகிச் செல்வார்களா?
எஸ். சுபைர்தீன்
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்