அமைச்சர் ரிசாத் பதியுதீன் சமூகத்துக்காக என்ன செய்தார் அவரது கட்சியான அ.இ.ம. கா என்ன செய்துள்ளது என சமூகத்தின் வாக்குகளை பெற்று அச்சமூகத்துக்கு சேவை செய்யாத முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் கேட்பது அவர்களின் அறியாமையை காட்டுகிறது என உலமா கட்சியின் தலைவரும் அ.இ.மக்கள் காங்கிரசின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சர் ரிசாத் பதியுதீன் என்பவர் தனது அமைச்சை பயன்படுத்தி தமக்கு வாக்களித்த வட மாகாண மக்களுக்கு மிக அதிகமாகவே சேவை செய்துள்ளார் என்பது அவரின் எதிரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். 2004 முதலே ரிசாத் பதியுதீன் அமைச்சராக உள்ளார்.
ரவூப் ஹக்கீம் 2000ம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்தும் ஒரு கட்சியின் தலைவராக அல்லாவிடினும் ஒரு அமைச்சராக தனக்கு வாக்களித்த மக்களுக்கு அமைச்சர் ரிசாத் செய்த சேவைகளில் 1 வீதத்தையாவது செய்துள்ளாரா என்றால் நிச்சயம் இல்லை.
2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஹக்கீம் போட்டியிட்ட போது சுமார் எண்பதினாயிரம் அப்பாவி முஸ்லிம்கள் அவருக்கு வாக்களித்தனர். அந்த வாக்குகளைப்பெற்று அமைச்சரான ஹக்கீம் அம்பாரை மாவட்ட மக்களுக்கு அந்தக்கால பகுதியில் ஏதாவது செய்தாரா? எதுவும் இல்லை. மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம். இவரது வெற்றிக்காக கண்டியில் தம் உயிரைக்கொடுத்த பத்து முஸ்லிம்களின் குடும்பத்தை கூட இவர் கணக்கில் எடுக்கவில்லை.
இத்தகைய வீணாய்ப்போன, மக்களை மறந்த ஒருவரை தலைவராக கொண்ட கட்சியினர்ருக்கு தனக்கு வாக்களித்த வடமாகாண மக்களுக்கு ஈடு இணையற்ற சேவைகளை செய்த அமைச்சர் ரிசாதை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.
அ. இ. மக்கள் காங்கிரஸ் என்பது கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 2005ம் ஆண்டுக்கு பின்னர்தான். அதன் தலைவராக அமைச்சர் ரிசாத் இருக்கவில்லை. சில வருடங்களின் பின்னரே ரிசாத் பதியுதீன் அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அது 2007ம் ஆண்டு என நினைக்கிறேன். அது வரை அதாவது 2000ம் முதல் 2007வரை முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே ஒரேயொரு முஸ்லிம் கட்சியாக பாராளுமன்றத்தில் கோலோச்சியது. இந்த காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் முஸ்லிம்களின் ஒரு உரிமையையாவது பெற்றுக்கொடுத்துள்ளனரா?
வடக்கிலும் கிழக்கிலும் அகதிகளான முஸ்லிம்களில் ஒருவரை மீள் குடியேற்றினார்களா? இல்லை. கிழக்கு முஸ்லிம்களின் பறிபோன ஒரு ஏக்கர் காணியையாவது மீட்டு கொடுத்தனரா?
அ. இ. ம. காங்கிரஸ் கட்சியாக பதிவு பெற்ற போதும் அதற்குரிய பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மட்டுமே இருந்தார். அதேவேளை மு.கா 2000ம் ஆண்டுமுதல் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. 2010ல் மக்கள் காங்கிரசுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
இந்தக்கட்சியை முப்பது வருட வரலாறு கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட்டு இக்கட்சி என்ன செய்துள்ளது என கேட்பது கொஞ்சமும் புத்திக்கு அப்பாற்பட்ட விடயமாகும். ஆனாலும் 2018 வரை ம.காவுக்கு அம்பாரையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லாத நிலையிலும் ஒப்பீட்டளவில் நான்கு பா.உக்களை அம்பாரையில் கொண்டுள்ள மு. காவைவிட பல சேவைகளை செய்துள்ளது.
உண்ணுவது தூங்குவது தவிர வேறு எதுவும் தெரியாத முஸ்லிம் காங்கிரசினரை மக்களை திரும்பிப்பார்க்க வைத்தது மக்கள் காங்கிரஸ். கிழக்கு மக்களை மடையர்களாக கருதி அவர்களை ஓரம் கட்டி வந்த ரவுப் ஹக்கீமை கிழக்கின் பக்கம் திரும்பி ஓட வைத்தவர் அமைச்சர் ரிசாதும் அவர் கட்சியுமாகும்.
கிழக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு வேறு மாகாணங்களுக்கு மு. கா பதவிகளை வழங்கிக்கொண்டிருந்த போது அம்பாரையில் ஒரு பா. உவும் இல்லாத நிலையில் பலருக்கும் திணைக்கள தலைமை பதவிகளை கொடுத்து அம்பாரைக்கு கவுரவம் கொடுத்த ஒரேயொரு முஸ்லிம் கட்சித்தலைவர் அமைச்சர் ரிசாதாகும்.
ஆகவே அமைச்சர் ரிசாதும் அவரது கட்சியினரும் தமக்கு கிடைத்த மக்கள் அதிகாரத்தை மக்களின் எதிர் பார்ப்புக்கும் மேலாக சேவை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அவர்களைப்பார்த்தே இன்று முஸ்லிம் காங்கிரசினர் அபிவிருத்திகளை செய்ய முணைகின்றனர். அதிலும் நிறைய ஊழல்களே நடப்பதாக அக்கட்சியினரே சொல்கின்றனர். இதனை அண்மைய அலி சாஹிர் மௌலானாவின் கருத்து தெரிவிக்கிறது.
(ன)