இங்கிலாந்தின் கிழக்கு சஸ்செக்ஸ் கவுண்டியைச் சேர்ந்த யுசிகேஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பென்னி (வயது 68). இவரது மனைவி கரோலின் (வயது 57). இவர்கள் இருவரும் தங்களின் ஒரு வயது பேத்தியுடன் கடைக்கு சென்றனர். குழந்தை ஐரிஸ் தூங்கியதால் காரின் பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு பொருட்களை வாங்கினர். சாவியை எடுக்கவில்லை. திரும்பி வந்து பார்த்தபோது கார் தானாகவே பூட்டிக் கொண்டிருந்தது. காரைத் திறக்க எந்த வகையிலும் முடியாததால், ஐரிஸின் பாட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கே வந்த போலீசார் வண்டியைத் திறக்க ஒரே வழி அதன் பின் பகுதியில் இருக்கும் கண்ணாடியை உடைப்பதே என எண்ணினர். அங்கே அம்மா மற்றும் தம்பியுடன் ஷாப்பிங் செய்ய பேட்மேன் உடையில் வந்திருந்த சாக் அஹமத் (5) வயது சிறுவன் குழந்தைக்கு உதவி செய்ய விரும்பினான்.
ஆகையால், அவன் காரின் பின்னால் உடைக்கப்பட்ட கண்ணாடி வழியாக உள்ளே இறக்கப்பட்டான். காரின் உள்பக்க பூட்டைத் திறந்து சுமார் நாற்பத்தைந்து நிமிடமாக உள்ளே மாட்டிக்கொண்டிருந்த ஐரிஸ் என்ற அந்தக் குழந்தையைக் காப்பாற்றினான். அங்கிருந்த போலீசார் முதல் குழந்தையின் பாட்டி வரை எல்லோரும் பேட்மேன் உடையில் வந்து ஐரிஸை காப்பாற்றிய சிறுவனின் தைரியத்தைப் பார்த்து மலைத்துப் போயினர்.
கார் தானாக பூட்டிக்கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.