முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அக்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறும் கோராப்பட்டுள்ளது.
கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக்கவின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில், உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே கடந்த காலங்களில் குணரட்னம் நாட்டை விட்டு வெளியேறியிருந்ததாகவும், இலங்கை அரசியலில் மீளவும் பிரவேசிப்பதற்கு வேறு பெயரில் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னொரு சந்தர்ப்பத்தில் குமார் குணரட்னம் கடத்தப்பட்ட போது அப்போதைய எதிர்க்கட்சியின் தலைவராக இருந்து அதற்கு எதிராக குரல் கொடுத்தவர் என்ற வகையில், குமார் குணரட்னம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்ள பேச்சுவார்த்தை நடாத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.