Breaking
Mon. Nov 25th, 2024

-ஊடகப்பிரிவு-

“இன்று சமூகத்தை விற்றுப்பிழைக்கும் சில முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் தேசியம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்காது மௌனம் காத்து வருகின்றனர். இவர்கள் எம்மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் அமைச்சர் ரிஷாட் போன்றவர்களைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளைக் கைவிடவேண்டும்” இவ்வாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளரும், மக்கள் காங்கிரஸின் சுகாதாரப் பிரிவின் தேசிய இணைப்பாளருமான டாக்டர். ஏ.எல். பரீத் கூறினார்.

நிந்தவூர் பிரதேச சபைக்கான உள்ளுராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில், முஸ்தபாபுரம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பீ.ஏ வாகித்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தில் டாக்டர், பரீத் தொடர்ந்து உரையாற்றுகையில், “1983 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறைந்த நமது மாபெரும் தலைவர் மர்ஹ_ம் அஷ்ரபுடன் இணைந்து கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டு உழைத்தவர்களில் நானும் ஒருவன்.
தலைவர் மர்ஹ_ம் அஷ்ரப் என்ன நோக்கத்திற்காகவும், இலட்சியத்திற்காகவும், முஸ்லிம் தேசியத்தை இலக்கு வைத்து முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தாரோ, அவை அத்தனையும் புறந்தள்ளப்பட்டு, தனி மனித ஆதிக்கத்திலும், சமூக நோக்கற்ற நிலையிலும் பாதை தவறிச்சென்று கொண்டிருக்கின்றது.
அன்று பேரம் பேசும் அரசியல் சக்தியாக மர்ஹ_ம் அஷ்ரப்பினால் அலங்கரிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்று சோரம் போன அரசியல் தலைமையாக மாறியுள்ளமை கவலைக்குரியவிடயமாகும். இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கழுவிய மீனில் நழுவிய மீனாக, சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் திராணியற்ற இத்தலைமை செயற்படுவது கண்கூடான விடயமாகும்.
இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் தமது பூர்வீகக் காணிகளைப் பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் பிரச்சினை உட்பட பல்வேறு பெருந் தேசியவாதிகளின் நெருக்குதல்கள், ஆக்கிரமிப்புகளுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.
இவற்றையெல்லாம் இத்தனை காலமும் வெறுமனே பார்த்துக் கொண்டு மக்களை பசப்புவார்த்தைகளால் ஏமாற்றி வந்த சிலதலைமைகள் இன்று மக்கள் மத்தியில் மேடைக்கு மேடை நீலிக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இவர்கள் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிர்ச்சினைகள் தொடர்பில் சாமர்த்தியமான முடிவுகளை எடுப்பதற்கு தயக்கம் காட்டிவருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் தனித்துவமான மரச்சின்னத்தையே கைவிட்டு, யானைப் பாகர்களாக வந்துள்ளோமெனத் தம்பட்டமடிக்கும் இவர்கள் எப்படி முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு விடிவைப் பெற்றுத்தரப் போகின்றனர்.
உண்மை நிலைமைகளை முஸ்லிம் மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளதால், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பையும், தலைவர் ரிஷாட்டையும், பலப்படுத்தவேண்டிய அவசியத்தையும் உணர்ந்து அணிதிரண்டு வருகின்றனர்” என்றார்.

Related Post