-ஊடகப்பிரிவு-
குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துக் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை இன்று மாலை (18) செலுத்தியது.
வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கட்சியின் முக்கியஸ்தருமான எம்.என்.நசீர் தலைமையில், மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது, குருநாகல் மாநகர சபை தலைமை வேட்பாளர் அசார்தீன் மொய்னுதீன், குளியாப்பிட்டிய பிரதேச சபை தலைமை வேட்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.சி.இர்பான், பொல்கஹவெல பிரதேச சபை தலைமை வேட்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன், ரிதீகமை பிரதேச சபையின் தலைமை வேட்பாளர் அஸ்ஹர், நாரம்மல பிரதேச சபை தலைமை வேட்பாளர் பைசர் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த நசீர் கூறியதாவது,
கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, முதன் முறையாக களமிறங்கிய போது, குருநாகல் மாவட்ட முஸ்லிம் அரசியலில் என்றுமில்லாதவாறு, பெருவாரியான வாக்குகளைப் பெற்றது. எனினும், மிகச்சொற்ப வாக்குகளால் நாம் தோல்வியடைந்த போதும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குருநாகல் மாவட்ட மக்களின் நலனில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் நாங்கள் தனித்துக் களமிறங்கி எமது கட்சியின் பலத்தை நிரூபித்துக் காட்டுவோம் என்று கூறினார்.