அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கிறிஸ் க்ராபோர்டு தன் மனைவி கர்ப்பமான செய்தியை அறிந்ததும் எல்லா தந்தையையும் போல உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்று அன்போடு கவனித்து வந்தார்.
இந்நிலையில், கர்ப்பம் தரித்த 20 ஆவது வாரத்தில் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏதோ பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதும் தம்பதியர் சோகத்தில் ஆழ்ந்தனர். 24 ஆவது வாரத்தில் குழந்தைக்கு ‘கார்டியோமையோபதி’ எனப்படும் இதய ரத்தக்குழாய் வீங்கியிருப்பதாகவும் இது மிகவும் அரிதானதென்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனால், குழந்தை உயிர்பிழைக்கும் என்ற நம்பிக்கை மேலும் குறைந்தது.
36 ஆவது வாரம் குழந்தையை ஆபரேசன் மூலம் வெளியே எடுக்க மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், 33 ஆவது வாரமே அவரது பனிக்குடம் உடைந்து குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது.குழந்தையை பார்த்த தம்பதியினர் முற்றிலுமாக நம்பிக்கையிழந்தனர். இந்த பிஞ்சுக்குழந்தை எப்படி இதய மாற்று அறுவை சிகிச்சையை தாங்கும் என்று நினைத்து அவர்கள் கதறி அழுதனர். எவ்வளவு நாள் தங்களுடன் இருப்பான் என்று தெரியாத மகனுக்கு ஆலிவர் க்ராபோர்டு என்று பெயரிட்டனர்.
மருத்துவர்களாலுமே எதையும் உறுதியாக சொல்ல முடியாத நிலை. இருந்தும் குழந்தை பிறந்த உடனே அறுவை சிகிச்சைக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிறந்த 4-ம் நாள் இதயத்திற்காக காத்திருப்போர் தேசிய பட்டியலில் ஆலிவரின் பெயர் சேர்க்கப்பட்டது. 6-ம் நாளே இதயம் கிடைத்தது.
உடனடியாக அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தொடங்கிய மருத்துவர்கள் குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்று இதயத்தைப் பொருத்தினர். 10 மணி நேரம் நடந்த இந்த சிகிச்சையின் போது வெளியே காத்திருந்த க்ராபோர்டு தம்பதியினர் நரக வேதனையை அனுபவித்தனர். அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததும் மருத்துவர்களுக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
தற்போது நுரையீரல் பலகீனமாக இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆலிவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்து ஆறு நாட்களே ஆன குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தது மருத்துவர்களின் சாதனைதான். அதே நேரம் அறுவை சிகிச்சையை தாங்கிக்கொண்டது குட்டிப் பையன் ஆலிவரின் சாதனையும்தான்.