இந்த ஆண்டின் ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரப் பணிப்பாளர் அமர சத்தரசிங்க இதனை தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களின் செலவுப் பெறுமதி 0.7 சதவீதத்தாலும், உணவில்லா பொருட்களின் செலவுப் பெறுமதி 0.1 வீதத்தாலும் குறைவடைந்தமை இந்த மாற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதத்தில் மரக்கறி, தேங்காய், உடன்மீன், சீனி, கோதுமை மா, அரிசி, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைவடைந்தன. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் பெறுமதியும் குறைவடைந்திருந்தது. எனினும், முட்டை, வாழைப்பழம், கோழி இறைச்சி உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள், தற்போதும் அதிகரித்து காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உணவில்லா பொருட்கள் பிரிவில் சுகாதாரம், வீட்டு வசதி, மின்சாரம், எரிவாயு போன்றவற்றில் ஏற்பட்ட செலவுப் பெறுமதி ஜுன் மாதத்தை விடவும் ஜுலை மாதத்தில் குறை வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அகற்றப்பட்டமை இதற்கு ஒரு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.