இதற்கமைய காலை, மாலை, இரவு பொலிஸ் ரோந்து சேவைகள், உடனடி வீதித் தடைகள், உடனடி சுற்றிவளைப்புகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சபையில் விசேட கூற்றொன்றை விடுத்து எழுப்பிய கேள்விக்கு நேற்று சபையில் சமர்ப்பித்திருந்த பதிலிலேயே அமைச்சர் சாசல மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
வடக்கில் இடம்பெறும் கொலைகள், கொள்ளைகள், போதைப்பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம், தாக்குதல்கள் முதலான சமூக விரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக பகுதிக்குப் பொறுப்பான அதிகாரிகள், சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள், பொது அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பொலிஸாரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்.
காலை, மாலை, இரவு என தொடர்ச்சியான நடமாடும் பாதுகாப்பு சேவை, மோட்டார் சைக்கிள் ரோந்து என்பவற்றுக்காக ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் அனைத்துப் பிரிவுகளும் உள்வாங்கப்படும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் உடனடி வீதித்தடைகள், உடனடி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்கள், சட்டவிரோத மாடு, மரங்கள், மணல் மற்றும் போதைப்பொருள் கொண்டுசெல்பவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.