ட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கேணிநகர் குளத்தில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கியதில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக் கிராமமான கேணிநகர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அப்பகுதியில் கிணறுகளில் நீர் வற்றிக் காணப்படுவதால், இரு சகோதரிகளின் பிள்ளைகளான இரண்டு சிறுமிகளும் தங்களது அம்மம்மாவுடன் கேணிநகர் குளத்தில் குளிப்பதற்குச் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் நீரில் மூழ்கிய போது அயலவர்களின் உதவியுடன் ஒரு சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியும், காப்பாற்றப்பட்டுள்ள சிறுமியும் கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் ஆண்டு இரண்டில் கல்வி கற்று வருபவர்கள் என்றும், இதில் மரணமடைந்துள்ள சிறுமி ஆப்தீன் மின்கா (வயது 07) மற்றும் காப்பாற்றப்பட்டுள்ள சிறுமி பரீட் ரஸ்கா (வயது 07) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காப்பாற்றப்பட்டுள்ள சிறுமி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மரணமடைந்த சிறுமியின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.