வியாபார நோக்குடன் பைக்கற்றில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர் பானத்துக்கு இடப்படும் கலர் உணவு பண்டத்துக்கு உதவாத நிறத்தூள் எனத் தெரிவித்து மன்னார் நீதிமன்றில் பொதுச் சுகாதார அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்திலுள்ள இலுப்பைக்கடவை வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை திடீர்
சோதனையிட்ட மாந்தை மேற்கு பொதுச் சுகாதார அதிகாரிகள் பக்கெற்றில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களுக்கு இடப்படும் கலரானது உணவுப் பண்டங்களுக்கு உதவாத பொருள் என குற்றம்சாட்டப்பட்டு இதை
உற்பத்தி செய்யும் வர்த்தகருக்கு மன்னார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இவ் உற்பத்திப்பொருளானது மல்லாவிப் பகுதியிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் இக்குளிர்பான
பக்கெற்றுக்கள் பல கிராமங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு விடப்பட்டு வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை பொதுச் சுகாதார அதிகாரி கஜன் இவ்வழக்கை தாக்கல் செய்தபோது சந்தேகநபரும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்த மன்னார் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இவ் வழக்கை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்துள்ளதுடன் இவ்வாறு உணவு விடயத்தில் சட்டமுறையற்ற தன்மையில் செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யும்படியும் அக்கடைகளை உடன் சீல் வைக்கும் படியும் சுகாதார அதிகாரியிடம் உத்தரவிட்டுள்ளார்.